UPDATED : நவ 21, 2026 09:33 PM
ADDED : நவ 21, 2026 09:30 PM
சென்னை: வெளிநாட்டு உயர் ரக மது வகைகள் விற்கும் கடைகளை அதிகரிக்க, ‘டாஸ்மாக்’ நிறுவனம் முடிவு செய்துள்ளது.
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், 4,048 கடைகள் வாயிலாக, பீர் மற்றும் மது வகைகளை விற்கிறது. இவற்றில், 205 கடைகளில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும், 538 வகை மதுபானங்கள் விற்கப்படுகின்றன.
இருப்பினும், பல கடைகளில், தாங்கள் விரும்பும் மது வகைகள் கிடைப்பதில்லை என, ‘குடி’மகன்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதையடுத்து, பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து, 40க்கும் மேற்பட்ட புதிய வகை பீர், மது வகைகளை வாங்கி, டாஸ்மாக் கடைகளில் விற்க, அதன் இயக்குநர்கள் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த மது வகைகள், ‘குடி’மகன்களுக்கு எளிதாக கிடைக்கும் வகையில், உயர் ரக மதுபானங்களை விற்கும் கடைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளது. மாவட்டத்திற்கு தலா, 20 கடைகள் வீதம், 760 கடைகளில் உயர் ரக மது வகைகள் விற்கப்பட உள்ளன.
இது குறித்து, டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ஏற்கனவே உள்ள மது கடைகளில், எந்தெந்த கடைகளில், உயர்ரக மது வகைளை விற்பது என்ற விபரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. புதிய பிராண்ட் மது வகைகள், வரும் ஜன., முதல் மது கடைகளில் கிடைக்கும்’ என்றார்.
