UPDATED : நவ 21, 2026 09:33 PM
ADDED : நவ 21, 2026 09:30 PM

சென்னை: திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில், உச்ச நீதிமன்ற இடைக்கால உத்தரவை எதிர்த்து, த.வெ.க., அரசு அப்பீல் செய்ய இருப்பதாக வெளியான தகவல், ஹிந்து அமைப்புகளிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இவ்விஷயத்தில், ‘தி.மு.க., போலவே த.வெ.க.,வும் செயல்படுகிறது’ என, ஹிந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிகுமார் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கை, கடந்த ஆண்டு நவம்பரில் விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, ‘திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத் துாணில் தீபம் ஏற்ற வேண்டும்’ என, தீர்ப்பளித்தது. இதை, இரு நீதிபதிகள் அமர்வு உறுதி செய்தது. இதற்கு தடை விதிக்கக்கோரி, தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
நேற்று முன்தினம், இதை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் பஞ்சோலி அமர்வு, ‘திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் துாணில், நவ., 24ல் ஒரு முறை மட்டும் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்படுகிறது; தீபம் ஏற்றிய அறிக்கையை, மதுரை கலெக்டர் தாக்கல் செய்ய வேண்டும்’ என, இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
இதை வரவேற்ற பா.ஜ., மற்றும் ஹிந்து அமைப்புகள், ‘வரும் 24ம் தேதி கார்த்திகை தீபத்தன்று, தீபத் துாணில் தீபம் ஏற்ற வேண்டும். கடந்த ஆண்டு தி.மு.க., அரசு செய்தது போல், வேறு எந்த முயற்சியையும் த.வெ.க., அரசு மேற்கொள்ளக்கூடாது’ என, வலியுறுத்தின.
இந்நிலையில், மதுரையில் நேற்று பேட்டி அளித்த மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார், ‘‘திருப்பரங்குன்றம் விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு குறித்து, சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து வருகிறோம். உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வது குறித்தும் ஆலோசனை நடத்தப்படுகிறது. இது குறித்து இன்று காலைக்குள் முடிவு செய்வோம். திங்கட்கிழமை தான் நீதிமன்றம் செயல்படும்; அதற்குள் என்ன செய்வது என்பதை முடிவு செய்வோம்,’’ என்றார்.
இதனால், தீபத் துாணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, த.வெ.க., அரசு சீராய்வு மனு தாக்கல் செய்வது உறுதியாகி உள்ளது. இதற்கு, பா.ஜ., மற்றும் ஹிந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அதன் விபரம்:
* பா.ஜ., தேசிய செயலர் ம.வெங்கடேசன்:
தி.மு.க.,வின் ஹிந்து விரோத அணுகுமுறையை த.வெ.க., அரசும் பின்பற்றுவது, கடும் கண்டனத்திற்குரியது. நீதிமன்றம் உத்தரவிட்டால், மேல்முறையீட்டுக்கு கூட அனுமதி தராமல், உடனே ஹிந்து கோவிலை தமிழக அரசு இடிக்கிறது; ஆனால், உச்ச நீதிமன்றமே உத்தரவிட்டாலும், தீபம் ஏற்ற மறுக்கிறது. திருப்பரங்குன்றம் மலை உச்சயில் தீபத் துாண் அமைந்துள்ள இடம், கோவிலுக்கு சொந்தமானது என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்று.
அங்கு, ஆண்டுக்கு ஒரு நாள், சில மணி நேரம் தீபம் ஏற்றுவதால், யாருக்கும் எந்த பிரச்னையும் வரப் போவதில்லை. எனவே, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, தீபத் துாணில் தீபம் ஏற்ற, த.வெ.க., அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தீபம் ஏற்றினால் தான், மத நல்லிணக்கம் ஏற்படும் என்பதை, அரசு உணர வேண்டும்.
* முன்னாள் கவர்னர் தமிழிசை:
தி.மு.க.,வும், த.வெ.க.,வும் ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துவதில் ஒற்றுமையுடன் உள்ளன. உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், கடந்த ஆண்டு தீபம் ஏற்றுவதை தி.மு.க., அரசு தடுத்தது. இந்த ஆண்டு அப்படி நடக்கக்கூடாது என்றே தமிழக மக்கள் விரும்புகின்றனர்.
* ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் நிர்வாகி வசந்தராஜன்:
முதல்வர் சொல்வது போல், த.வெ.க., அரசு மதச்சார்பற்ற அரசாக இருந்தால், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்த வேண்டும். தி.மு.க., இந்த விஷயத்தை தவறான போக்கில் எடுத்துச் சென்று, எல்லா இடங்களிலும் தோற்றது. ஓட்டு வங்கிக்காக த.வெ.க.,வும், அதே அரசியலை பின்தொடர்கிறது. இது, த.வெ.க.,வுக்கு எதிர்வினையை ஏற்படுத்தும்.
* இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் இளங்கோவன்:
உயர் நீதிமன்றத்தில் இரு முறையும், உச்ச நீதிமன்றத்தில் இரு நீதிபதி அமர்வும், தீபம் ஏற்ற வேண்டும் என்றே தீர்ப்பளித்துள்ளன. எனவே, த.வெ.க., அரசு சீராய்வு மனு தாக்கல் செய்தாலும், தீபம் ஏற்ற வேண்டும் என்றே தீர்ப்பு வரும். அனைத்து மதத்தினருக்கும் பொதுவாக நடந்து கொள்வதே மதச்சார்பின்மை. ஹிந்துக்களுக்கு எதிராக நடந்து கொள்வது மதவாதம்; இதை உணர்ந்து, த.வெ.க., அரசு செயல்பட வேண்டும்.
* இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்:
த.வெ.க., அரசு சீராய்வு மனு தாக்கல் செய்தாலும், இந்த தீர்ப்பே நிலைக்கும். தி.மு.க., தலைவர் ஸ்டாலின் துாண்டுதலில், கம்யூனிஸ்ட்களும், வி.சி.க.,வும், த.வெ.க., அரசுக்கு தர்ம சங்கடத்தை உண்டாக்குகின்றன; த.வெ.க., கூட்டணிக்கு சென்ற பின்னும், தி.மு.க., சொல்படியே நடக்கின்றன. முதல்வர் விஜய் நேரடியாக தலையிட்டு, தீபத் துாணில் தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.* பாரத் இந்து முன்னணி தலைவர் ஆர்.டி.பிரபு:
ஹிந்து கோவில் மரபுகளை காக்க வேண்டிய பொறுப்பிலுள்ள ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மவுனமாக இருப்பது, வேதனை அளிக்கிறது. தி.மு.க.,வின் ஹிந்து விரோத பாதையிலேயே த.வெ.க., அரசும் பயணிப்பது, அமைச்சர் நிர்மல்குமாரின் பேச்சிலிருந்து தெளிவாகிறது. த.வெ.க., கூட்டணியில் உள்ள முஸ்லிம் கட்சிகளுக்காக, ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துவதை ஏற்க முடியாது.
* விஷ்வ ஹிந்து பரிஷத் தமிழக இணை பொதுச்செயலர் விஜயகுமார்:
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என, மூன்று முறை நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கி விட்டன. தி.மு.க.,வின் பாதையில் த.வெ.க., பயணித்தால், அவர்களுக்கும் எமகண்டம் தொடங்கிவிட்டது என்றே அர்த்தம். அரசு சீராய்வுக்கு செல்வதால், எந்த பலனும் இல்லை.
* அனுமன் சேனா பொதுச்செயலர் ராமலிங்கம்:
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாத தி.மு.க., ஆட்சியை இழந்தது. இதை உணர்ந்து, உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி தீபத் துாணில் தீபம் ஏற்ற, த.வெ.க., அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
