முன்பதிவு இல்லாத ரயில் பெட்டியில் 150 டிக்கெட் மட்டுமே வழங்க முடிவு
முன்பதிவு இல்லாத ரயில் பெட்டியில் 150 டிக்கெட் மட்டுமே வழங்க முடிவு
ADDED : ஜூலை 17, 2025 09:58 PM
சென்னை:விரைவு ரயில்களின் முன்பதிவு இல்லாத பெட்டிகளில், கடும் நெரிசலை தவிர்க்க, ஒவ்வொரு பெட்டியிலும் தலா, 150 டிக்கெட் மட்டுமே வழங்க, ரயில்வே திட்டமிட்டுள்ளது.
தென்மாவட்டங்கள் போன்ற முக்கிய வழித்தடங்களில், ரயில்களில் டிக்கெட் எடுக்க கடும் போட்டி நிலவுகிறது. முன்பதிவு பெட்டிகளில் டிக்கெட் உறுதியாகாத பயணியர், வேறு வழியின்றி முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணிக்கின்றனர்.
இதனால், விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில், முன்பதிவு இல்லாத பெட்டிகளில், பயணியர் கூட்டம் அலைமோதுகிறது. ஒவ்வொரு பெட்டியிலும், 80 பேர் அமர்ந்து பயணிக்கலாம். ஆனால், 200 முதல் 300 பேர் வரை பயணிக்கின்றனர். இதனால், பயணியர் அவதிக்குள்ளாகின்றனர்.
சில மாதங்களுக்கு முன், உத்தர பிரதேசத்தில் நடந்த மகா கும்பமேளாவுக்கு செல்வதற்காக, டில்லி ரயில் நிலையத்தில் கூடிய கூட்டத்தில், நெரிசலில் சிக்கி, 18 பேர் இறந்தனர்.
இந்த சம்பவத்துக்கு அளவுக்கு அதிகமான பயணியருக்கு, முன்பதிவில்லாத டிக்கெட் வழங்கியதே காரணம் என்ற புகார் எழுந்தது. இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க, முன்பதிவு இல்லாத பெட்டிகளில், நெரிசலை தவிர்க்க வேண்டும் என, அதிகாரிகள் குழு ரயில்வே வாரியத்துக்கு பரிந்துரை செய்தது.
இது குறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
விரைவு ரயில்களின் முன்பதிவில்லாத பெட்டிகளில், கூட்டத்தை கட்டுப்படுத்த, ரயில்வே நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளது.
முதல் கட்டமாக, டில்லி ரயில் நிலையத்தில், ஒரு முன்பதிவில்லா பெட்டிக்கு, 150 டிக்கெட்கள் வழங்கும் முறை, சோதனை முயற்சியாக துவக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை, மும்பை, கொல்கட்டா, சென்னை, பெங்களூரு போன்ற முக்கிய ரயில் நிலையங்களிலும், படிப்படியாக துவங்குவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராய்ந்து வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

