செயற்கைக்கோள் தொலைபேசி 500 மீனவர்களுக்கு வழங்க முடிவு
செயற்கைக்கோள் தொலைபேசி 500 மீனவர்களுக்கு வழங்க முடிவு
ADDED : செப் 16, 2025 11:59 PM
சென்னை:ஆழ்கடல் மீன் பிடிப்புக்கு செல்லும் மீனவர்களுக்கு, 200 செயற்கைக்கோள் தொலைபேசி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதன் எண்ணிக்கையை 500 ஆக உயர்த்த, மீன்வளத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
'மத்திய, மாநில அரசுகளின் நிதி பங்களிப்பில், ஆழ்கடல் மீன் பிடிப்பிற்கு செல்லும் மீனவர்கள் 200 பேருக்கு, 40 சதவீதம் மானியத்தில், செயற்கைக் கோள் தொலைபேசி வழங்கப்படும்' என, சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.
இதற்காக 80 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. அரசு வழங்கும் மானியத் தொகையில், 60 சதவீதத்தை மத்திய அரசு வழங்குகிறது. மீதித் தொகையை மாநில அரசு வழங்குகிறது.
இதுவரை 100 மீனவர்களுக்கு, செயற்கைக்கோள் தொலைபேசி வழங்கப்பட்டுள்ளது. மீனவர்கள் ஏராளமானோர், செயற்கைக் கோள் தொலைபேசி கேட்டு விண்ணப்பித்துள்ளனர். எனவே, பயனாளிகள் எண்ணிக்கையை, 500 ஆக உயர்த்தும்படி, மத்திய, மாநில அரசுகளுக்கு மீன்வளத்துறை பரிந்துரை செய்துள்ளது.
இது குறித்து, மீன்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
செயற்கைக்கோள் தெலைபேசி விலை, 1.07 லட்சம் ரூபாய். மீனவர்கள் 60,000 ரூபாய் செலுத்தினால், இதை பெற முடியும். பயனாளிகள் எண்ணிக் கையை, 500 ஆக அதிகரிக்க, மீன்வளத்துறை சார்பில் பரிந்துரை செய்யப்பட்டது. இதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

