ஆன்லைன் வணிக நிறுவனங்கள் மூலம் கூட்டுறவு சங்க பொருட்கள் விற்க முடிவு
ஆன்லைன் வணிக நிறுவனங்கள் மூலம் கூட்டுறவு சங்க பொருட்கள் விற்க முடிவு
ADDED : ஜூலை 11, 2025 09:50 PM
சென்னை:கூட்டுறவு சங்கங்கள் தயாரிக்கும் மளிகை பொருட்கள், எண்ணெய் வகைகள் போன்றவற்றை வீடுகளுக்கு வினியோகிக்க, 'அமேசான், பிளிப்கார்ட், செப்டோ' உள்ளிட்ட, 'ஆன்லைன்' வணிக நிறுவனங்களுடன், கூட்டுறவு துறை அதிகாரிகள் பேச்சு நடத்தி வருகின்றனர்.
கூட்டுறவு துறையின் கீழ், கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு பண்டக சாலைகள் செயல்படுகின்றன.
இவை, அரிசி, பருப்பு வகைகள், மஞ்சள் துாள், மசாலா பொருட்கள், எண்ணெய் வகைகள் போன்றவற்றை தயாரிக்கின்றன.
அவை, 'அர்த்தநாரிஸ்வரா, மங்களம், மருதம், அமிர்தம் பசுமை, முல்லை, காமதேனு' உள்ளிட்ட வணிகப் பெயரில் விற்கப்படுகின்றன.
கூட்டுறவு பல்பொருள் அங்காடிகள், அமுதம் அங்காடிகளில் இவை கிடைக்கின்றன.
'அமேசான், பிளிப்கார்ட், செப்டோ' உள்ளிட்ட நிறுவனங்கள், 'ஆன்லைன்' வணிகத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிறுவனங்களின் மொபைல் செயலியில், முன்னணி நிறுவனங்களின் மளிகை பொருட்கள் கிடைக்கின்றன.
அவற்றை தேர்வு செய்து, வாடிக்கையாளர்கள், 'ஆர்டர்' செய்ததும், வீடுகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.
கூட்டுறவு சங்கங்களின் தயாரிப்புகள் தரமாகவும், விலை குறைவாகவும் உள்ளன.
அவற்றின் விற்பனையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே, 'ஆன்லைன்' வணிகத்தில் கூட்டுறவு தயாரிப்புகளையும் சேர்த்து விற்க, 'அமேசான், பிளிப்கார்ட், செப்டோ' உள்ளிட்ட நிறுவனங்களுடன், கூட்டுறவு துறை அதிகாரிகள் பேச்சு நடத்தி வருகின்றனர்.
அடுத்த இரு மாதங்களுக்குள், இந்த சேவையை துவக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.