‘3.0’ இணைய ஒப்பந்தத்தை ரத்து செய்க பத்திரம் எழுதுவோர் சங்கம் போராட்டம்
‘3.0’ இணைய ஒப்பந்தத்தை ரத்து செய்க பத்திரம் எழுதுவோர் சங்கம் போராட்டம்
ADDED : நவ 06, 2026 07:44 PM
நாமக்கல்: ‘பத்திர பதிவுத்துறையில், ‘ஸ்டார் 3.0’ இணைய ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த கூடாது’ என, வலியுறுத்தி, தமிழ்நாடு பத்திரம் எழுதுவோர் சங்கத்தினர், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் ஒருங்கிணைந்த மாவட்ட பதிவாளர் அலுவலகம் முன், இன்று (நவ.,6) தமிழ்நாடு பத்திரம் எழுதுவோர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் அன்பழகன் தலைமை வகித்தார். துணை செயலாளர் நாகேந்திரன் முன்னிலை வகித்தார். இதில், மாவட்டம் முழுவதிலும் இருந்து, 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
அதில், சங்க தலைவர் அன்பழகன் பேசியதாவது:
தமிழகத்தில், பத்திரப்பதிவு துறையை நவீனப்படுத்தும் நோக்கில், 2018 பிப்.,ல், ‘ஸ்டார் 2.0’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மேம்படுத்தப்பட்ட வடிவமாக, ‘ஸ்டார் 3.0’ திட்டம் உருவாக்கப்பட்டு, கடந்த ஆக., 17ல், முழுமையாக பயன்பாட்டுக்கு வந்தது. மேலும், புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், அங்கீகரிக்கப்பட்ட மனை பிரிவுகளின் முதல் முறை விற்பனை பத்திரங்கள், வங்கி கடனுக்கான ஆவணங்கள் உள்ளிட்டவற்றை இணைய வழியில் பதிவு செய்யும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டது.
புதிய திட்டம் நடைமுறைக்கு வந்த பின், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புதிதாக உருவாக்கப்பட்ட வீட்டுமனைகளுக்கான சர்வே எண், பதிவுத்துறையின், ‘டி.என்.ரீஜினெட்’ இணையதளத்தில் இடம்பெறவில்லை என, புகார் எழுந்துள்ளது. இதனால், சம்பந்தப்பட்ட மனைகளை வாங்கியவர்கள் பத்திரப்பதிவு செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.
மேலும், காகிதம் இல்லா மற்றும் நேரில் வர தேவையற்ற பதிவு நடைமுறையால், வீட்டு பத்திரம் பதிவு செய்ய முடியாமல், கடந்த, 10 நாட்களாக தேக்கமடைந்துள்ளது. இதன் காரணமாக, பத்திரம் எழுதுவோர் மற்றும் அதை சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ளோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பழைய நடைமுறையில், எளிதாகவும், விரைவாகவும், பாதுகாப்பாகவும் பத்திரம் பதிவு செய்யும் முறை இருந்தது.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
