ADDED : அக் 01, 2025 08:01 AM

விருதுநகர்; தமிழகத்தில், 11 அரசு பி.எஸ்.சி., நர்சிங் கல்லுாரிகள் துவங்க மத்திய அரசு அனுமதி வழங்கி இரண்டு ஆண்டுகளை கடந்தும் மாணவர்கள் சேர்க்கை, கட்டடபணிகள் எதுவும் துவங்கப்படவில்லை.
திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், அரியலுார், உட்பட 11 மாவட்டங்களில் புதிதாக அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைகள் 2022 ஜன., 12ல் திறக்கப் பட்டன.
இவற்றில் தற்போது இறுதியாண்டு மாணவர்கள் படிக்கின்றனர். மேலும், முதுநிலை மருத்துவ படிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டு, ஒரு கல்லுாரிக்கு தலா 24 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இக்கல்லுாரிகளில் பி.எஸ்.சி., நர்சிங் பயிற்சி கல்லுாரி துவங்க மத்திய சுகாதாரம், குடும்ப நல அமைச்சகம் 2023ல் அனுமதி அளித்தது.
அந்த கல்லுாரிகளின் வளாகத்தில் கட்டுமானத்திற்காக, 17,000 சதுரடியும், விடுதிக்கு, 15,000 சதுரடியில் இடங்களும் தேர்வு செய்யப்பட்டன.
இ டங்கள் தேர்வு செய்து, இரண்டு ஆண்டுகளை கடந்தும், இதுவரை மாணவர் சேர்க்கையோ, கட்டட பணிகளோ துவங்கப்படவில்லை. இவற்றில் தற்போது டிப்ளமோ நர்சிங் கல்லுாரிகள் மட்டுமே செயல் பட்டு வருகிறது.
தனியா ர் பி.எஸ்.சி., நர்சிங் கல்லுாரிகளில் ஆண்டிற்கு 1 முதல் 2 லட்சம் ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கும் நிலையில், குறைந்த கட்டணத்தில் படிக்கும் வாய்ப்பு தாமதமாவதாக நர்சிங் படிக்க விரும்புவோர் குமுறுகின்றனர்.