UPDATED : ஜூன் 08, 2025 02:56 AM
ADDED : ஜூன் 08, 2025 02:36 AM

மதுரை: உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மதுரை பயணம், தமிழக அரசியல் வட்டாரங்களில் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.
மஹாராஷ்டிரா, உ.பி., குஜராத் என பல மாநில சட்டசபை தேர்தல்களில், பா.ஜ., வெற்றி பெற வியூகம் அமைத்த அவர், அடுத்தாண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலில் பா.ஜ., எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து, பா.ஜ., தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் பேச இருக்கிறார்.
தி.மு.க., செய்து வரும் ஊழலால், தமிழகம் எந்த அளவிற்கு நாசமாகி உள்ளது என்பது தொடர்பாக, பல குறிப்புகளை தன்னுடன் கொண்டு வந்துள்ளாராம்.
'மத்திய உளவு அமைப்புகள் வாயிலாக, தி.மு.க.,விற்கு எதிராக கிடைத்துள்ள விபரங்கள், தி.மு.க., சீனியர்களே, பா.ஜ., தலைவர்களிடம் 'போட்டுக் கொடுத்த' ஊழல் விவகாரங்கள் என, பலவற்றை பற்றியும் விரிவாக பேசுவார் அமித் ஷா என்கிறது டில்லி பா.ஜ., வட்டாரம்.
உள்துறை அமைச்சருக்கு நெருக்கமான குஜராத்தைச் சேர்ந்த 10 நண்பர்கள், தமிழகம் முழுக்க ஏற்கனவே பயணம் செய்து வருகின்றனராம். இவர்கள், தமிழகத்தில் தொழில் செய்யும் சக குஜராத்திகளோடு தொடர்பு கொண்டு, கள நிலவரம் குறித்த விபரங்களை சேகரித்து வருகின்றனர்; அத்துடன், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பும், ஏற்கனவே தமிழகத்தில் களம் இறங்கிவிட்டது. இவர்கள் வாயிலாக தனக்கு கிடைக்கும் தகவல்களை வைத்து, தி.மு.க.,வை ஒரு வழியாக்க திட்டமிட்டுள்ளாராம் அமித் ஷா.
'வரும் 2026 தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்க துவங்கிவிட்டது. முருக பக்தர்கள் மாநாட்டிற்கு முன்பாக, அமித் ஷாவின் தமிழக, 'விசிட்' மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது' என, சொல்லப்படுகிறது.