அடுத்தாண்டு கோடையில் 25 சதவீதம் மின் பற்றாக்குறை தமிழகத்திற்கு டில்லி எச்சரிக்கை
அடுத்தாண்டு கோடையில் 25 சதவீதம் மின் பற்றாக்குறை தமிழகத்திற்கு டில்லி எச்சரிக்கை
ADDED : செப் 27, 2025 02:11 AM
சென்னை:தமிழக மின் தேவை தினமும் சராசரியாக, 16,000 மெகா வாட் என்றளவில் உள்ளது. இது, கோடையில், 20,000 மெகா வாட்டை தாண்டுகிறது. இதை பூர்த்தி செய்ய, இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் போதவில்லை. இதனால், மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது.
வரும், 2026 கோடை காலத்தில், தமிழக சட்டசபை தேர்தல் நடக்கிறது. எனவே, அந்த காலத்தில் மின் தேவை எவ்வளவு அதிகரிக்கும்; அதை பூர்த்தி செய்ய எவ்வளவு மின்சாரம் கிடைக்கும் உள்ளிட்ட விபரங்களை, தமிழக மின் வாரியத்திற்கு, மத்திய மின் துறை தெரிவித்துள்ளது. இந்த விபரம், முந்தைய ஆண்டுகளின் மின் தேவை சராசரி அடிப்படையில் மதிப்பிடப்பட்டு உள்ளது.
அதன்படி, தமிழகத்தில் பகலில் சூரியசக்தி மின்சாரம் அதிகம் கிடைப்பதால், 2026ல் பகல் நேர மின் தேவையை பூர்த்தி செய்வதில் பாதிப்பில்லை. அதேசமயம், மாலை நேர மின் தேவையை பூர்த்தி செய்வதில், 25 சதவீதம் அதாவது, 5,000 மெகா வாட் மின் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மின் வாரிய அதிகாரி கூறியதாவது:
தினமும் மாலை, 6:00 மணி முதல் இரவு, 10:00 மணி வரை அதிக மின்சாரம் தேவைப்படும். 2026 ஜன., முதல் ஜூன் வரை இந்த நேரத்தில், மின் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க, பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு கூறினார்.