வங்கதேச ஆடை இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்க வலியுறுத்தல்
வங்கதேச ஆடை இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்க வலியுறுத்தல்
ADDED : டிச 30, 2024 12:45 AM

திருப்பூர்:'வங்கதேச துணி மற்றும் ஆடை இறக்குமதியை, வரிவிதிப்பால் கட்டுப்படுத்த வேண்டும்' என, திருப்பூர் பின்னலாடை துறையினர் வலியுறுத்திஉள்ளனர்.
பின்னலாடை துறையைச் சேர்ந்த பல்வேறு தொழில் கூட்டமைப்புகளின் ஆலோசனை கூட்டம், திருப்பூரில் நடந்தது. இதில், மூன்று ஆண்டுகளாக, வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் ஆடைகள் மற்றும் துணிகளின் அளவு அதிகரித்துள்ளது.
இதை கட்டுப்படுத்த 'கவுன்டர்வெய்லிங்' அல்லது, 'ஆன்ட்டி டம்பிங்' வரி விதித்து, ஏற்றுமதி மற்றும் உற்பத்தியாளர்களை மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்.
வரி அமலுக்கு வரும் வரை, நாட்டில் உள்ள அனைத்து துணி மற்றும் ஆயத்த ஆடை உற்பத்தியாளர் சங்கங்களும், வங்கதேசத்துடனான வர்த்தகத்தை நிறுத்திக்கொள்ள வேண்டும். இதை திருப்பூர் அனைத்து தொழில் அமைப்புகள் சார்பில், நாடு முழுதும் உள்ள அமைப்புகளுக்கு வலியுறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.தீர்மான விபரங்கள், மத்திய வர்த்தகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர்களுக்கு அனுப்பப்பட்டது.
ஏற்றுமதியாளர் சங்கம், தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம், பின்னல் துணிஉற்பத்தியாளர் சங்கம், சாய ஆலை உரிமையாளர் சங்கம், கம்ப்யூட்டர் எம்ப்ராய்டர்ஸ் சங்கம், ரோட்டரி ஸ்கிரீன் பிரின்டிங் சங்கம், தென்னிந்திய இறக்குமதி இயந்திர பின்னல் துணி உற்பத்தியாளர் சங்கம் உள்ளிட்ட சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.