ADDED : ஜூலை 23, 2024 07:38 PM
சென்னை:தி.மு.க., அரசு பதவியேற்ற பின், கடந்த மூன்று ஆண்டுகளில், மூன்றாவது முறையாக மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளததை கண்டித்தும், ரேஷன் பருப்பு, பாமாயில் வினியோகத்தை நிறுத்த முயற்சிப்பதை கண்டித்தும், அ.தி.மு.க., சார்பில், அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மின் கட்டண உயர்வால், பழைய காலத்திற்கு திரும்பும் நிலை உள்ளதை காட்டும் வகையில், சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர், கைகளில் அரிக்கேன் விளக்கு மற்றும் பெட்ரோமாக்ஸ் விளக்குகளை எடுத்து வந்திருந்தனர்.
இது தொடர்பாக, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அறிக்கை:
நிர்வாகத் திறமை இல்லாத அரசு, ஒருபுறம் மின் கட்டண சுமையை ஏற்றியதுடன், மறுபுறம் அத்தியாவசிய பொருட்களான, துவரம் பருப்பு, பாமாயில் வழங்காமல் அல்லல்படுத்துகிறது. அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காத நிலையில், தமிழகத்தில் தங்குதடையின்றி போதைப் பொருள்கள் மட்டும் கிடைக்கிறது.
உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை திரும்பப் பெறுவதோடு, ரேஷன் கடைகளில், துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவை தடையின்றி கிடைப்பதை, முதல்வர் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

