ADDED : அக் 04, 2024 11:24 PM
சென்னை:நிதிநிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட, தேவநாதனின் ஜாமின் மனுவை சென்னை சிறப்பு நீதிமன்றம் இரண்டாவது முறையாக தள்ளுபடி செய்தது.
சென்னை மயிலாப்பூரில் இயங்கி வந்த, 'மயிலாப்பூர் ஹிந்து பெர்மனென்ட் பண்ட்' நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களிடம், 24.50 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, அதன் இயக்குனர் தேவநாதன் உள்ளிட்ட ஆறு பேரை, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கில், தேவநாதன் உள்ளிட்ட மூன்று பேர் ஜாமின் மனுக்களை, சிறப்பு நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், மீண்டும் ஜாமின் கோரி, தேவநாதன் உள்ளிட்ட ஐந்து பேர் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இம்மனுக்கள், நீதிபதி என்.வெங்கடவரதன் முன், விசாரணைக்கு வந்தன. போலீஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பாபு, “புகார்கள் தொடர்ந்து வருகின்றன, விசாரணை முடியவில்லை; ஜாமினில் விடக்கூடாது,” என்றார். இதை ஏற்ற நீதிபதி வெங்கடவரதன், ஐந்து பேர் ஜாமின் மனுக்களையும் நிராகரித்து உத்தரவிட்டார்.