'ஆருத்ரா' ராஜசேகரை நாடு கடத்துங்கள்: அபுதாபி போலீசுக்கு தமிழகம் கடிதம்
'ஆருத்ரா' ராஜசேகரை நாடு கடத்துங்கள்: அபுதாபி போலீசுக்கு தமிழகம் கடிதம்
ADDED : நவ 13, 2024 04:34 AM

சென்னை ; 'ஓராண்டுக்கும் மேலாக அபுதாபி சிறையில் அடைக்கப்பட்டுள்ள, ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிதி நிறுவன இயக்குனர் ராஜசேகரை, இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும்' என, அந்நாட்டு போலீசாருக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், ஆரணி, செய்யாறு என, பல இடங்களில், 'ஆருத்ரா கோல்டு டிரேடிங்' என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது.
அதன் இயக்குனர் ராஜசேகர் மற்றும் அவரின் கூட்டாளிகள், தங்கள் நிறுவனத்தில் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், மாதம், 36,000 ரூபாய் வட்டியாக தரப்படும் என்று அறிவித்து, ஒரு லட்சத்து, 9,255 பேரிடம், 2,438 கோடி ரூபாயை மோசடி செய்துள்ளனர்.
இதுகுறித்து, தமிழக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, 10க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளனர். ராஜசேகர் மற்றும் அவரின் மனைவி உஷா உள்ளிட்டோர் வெளிநாடுகளுக்கு தப்பி விட்டனர்.
அவர்களில், ராஜசேகர் ஓராண்டுக்கு முன், ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில், அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரின் மனைவி உஷா தலைமறைவாக உள்ளார்.
இந்நிலையில், இரு நாட்டு கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின்படி, ராஜசேகரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என, 'இன்டர்போல்' எனப்படும், சர்வதேச போலீசார் உதவியுடன், சில மாதங்களுக்கு முன், தமிழக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கோரிக்கை விடுத்தனர்.
எனினும், ராஜசேகர் அபுதாபி சிறையிலேயே உள்ளார். தற்போது அவரை, இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என, மீண்டும் அந்நாட்டு போலீசாருக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், 'ராஜசேகரை சென்னைக்கு அழைத்து வரும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். அவர் தமிழகத்தில் வாங்கியுள்ள சொத்துக்களையும் முடக்கி வருகிறோம்.
ராஜசேகரிடம் விசாரித்தால்தான், மற்ற இடங்களில் வாங்கியுள்ள சொத்துக்கள் விபரம் தெரியவரும். இதனால், அவரை நாடு கடத்துமாறு வலியுறுத்தி வருகிறோம்' என்றனர்.

