நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதான தேவநாதனுக்கு ரூ.177 கோடிக்கு சொத்து
நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதான தேவநாதனுக்கு ரூ.177 கோடிக்கு சொத்து
ADDED : ஏப் 04, 2025 01:54 AM
சென்னை:நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதான தேவநாதனுக்கு சொந்தமான, 177 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களின் விபரங்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டன.
சென்னை மயிலாப்பூரில், 'தி ஹிந்து பெர்மனன்ட் பண்ட்' என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது.
தள்ளுபடி
இதில், 100க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் இருந்து, 24.50 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, அதன் இயக்குநர் தேவநாதன், அவரது கூட்டாளிகள் குணசீலன், சாலமன் மோகன்தாஸ், மகிமைநாதன், தேவ சேனாதிபதி, சுதிர் சங்கர் ஆகியோர் மீது, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இவர்களில் தலைமறைவாக உள்ள சாலமன் மோகன்தாஸ் தவிர, மற்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஜாமின் கோரி தேவநாதன் உட்பட மூன்று பேர் தாக்கல் செய்த மனுக்களை, சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தேவநாதன், குணசீலன் ஆகியோர், இரண்டாவது முறையாக ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு, நீதிபதி சுந்தர் மோகன் முன் நிலுவையில் உள்ளது. கடந்த விசாரணையின் போது, தேவநாதனின் சொத்துக்களை ஏலம் விட்டு, அதில் வரும் பணத்தை, பாதிக்கப்பட்ட நபர்களுக்கு வழங்கலாமா என்பது குறித்தும், அவரது சொத்துக்கள் குறித்தும் விபரங்களை தாக்கல் செய்ய, தேவநாதன் தரப்புக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
விசாரணை
இந்த வழக்கு, மீண்டும் நீதிபதி சுந்தர் மோகன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேவநாதன் தரப்பில், அவரது சொத்து விபரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், 'சென்னை பாரிமுனையில், 24 கோடி ரூபாய் மதிப்புள்ள கட்டடம்; மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில், 63 கோடி ரூபாய் மதிப்புள்ள கட்டடம்; திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை பைபாஸ் பகுதியில், 'தேவநாதன் எஸ்டேட்' என்ற பெயரில், 50 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் என, மொத்தம், 177 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதை பதிவு செய்த நீதிபதி, காவல்துறை, முதலீட்டாளர்கள் தங்கள் தரப்பு விளக்கத்தை அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் 9ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

