பழநியில் ஆக்கிரமிப்புகளால் அலகு குத்தி வந்த பக்தர்கள் அவதி
பழநியில் ஆக்கிரமிப்புகளால் அலகு குத்தி வந்த பக்தர்கள் அவதி
ADDED : ஜன 01, 2024 11:25 PM

பழநி : திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் ஆங்கிலப்புத்தாண்டை முன்னிட்டு நேற்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். நீண்ட வரிசையில் பக்தர்கள் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். நகரில் அதிகரித்துள்ள ஆக்கிரமிப்பு, நெரிசலால் அலகு குத்தி வந்த பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாயினர்.
இக்கோயிலில் ஆண்டு முழுவதும் ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். விடுமுறை நாட்களில் கூடுலாக வருகை தருவர். தற்போது சபரிமலை ஐயப்ப பக்தர்கள் சீசன் என்பதால் கூட்டம் அதிகம்.ஆங்கிலப்புத்தாண்டையொட்டி நேற்று பக்தர்கள் அதிகளவில் குவிந்தனர். மேலும் தைப்பூசத் திருவிழாவையொட்டி தற்போதே பாதயாத்திரை பக்தர்கள் வர துவங்கி விட்டனர். இவர்கள் வருகையாலும் நேற்று எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. தைப்பூச பாத யாத்திரை பக்தர்கள் பலர் காவடி எடுத்து அலகு குத்தி வந்தனர். சிலர் பறவை காவடி எடுத்து வந்தனர்.
கிரிவிதி, அடிவாரம் பகுதிகளில் ஆக்கிரமிப்பு கடைகள், வர்த்தக நிறுவனங்களால் அலகு குத்தி வந்த பக்தர்கள் மிகவும் அவதிக்குள்ளாயினர். அய்யம்புள்ளி ரோடு, பூங்காரோடு, கிரிவீதியில் வாகனங்களை பக்தர்கள் நிறுத்தியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வின்ச், தரிசன வரிசையிலும் பக்தர்கள் பல நேரம் காத்திருந்து டிக்கெட் பெற்றனர். பொது கட்டண தரிசன வரிசையில் பக்தர்கள் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

