இணையம் வழியே புகார் அளித்தால் மின்னணு ரசீது வழங்கும் திட்டம் தொடங்கி வைத்தார் டி.ஜி.பி.,
இணையம் வழியே புகார் அளித்தால் மின்னணு ரசீது வழங்கும் திட்டம் தொடங்கி வைத்தார் டி.ஜி.பி.,
ADDED : நவ 18, 2026 09:57 PM

சென்னை: ‘ஆன்லைன்’ வாயிலாக, காவல் துறையில் அளிக்கப்படும் புகார்களுக்கு, உடனடியாக, இ – சி.எஸ்.ஆர்., எனும் மின்னணு புகார் மனு ஏற்பு ரசீது வழங்கும் திட்டத்தை, டி.ஜி.பி., மகேஷ்குமார் அகர்வால், நேற்று தொடங்கி வைத்தார்.
பொதுமக்கள் நேரடியாக போலீஸ் நிலையங்களில் அளிக்கும் புகார் மனுக்களை, சி.சி.டி.என்.எஸ்., எனும் குற்றம் மற்றும் குற்றவாளிகள் கண்காணிப்பு இணையதளத்தில் பதிவேற்றம் செய்து, அம்மனுக்கள் ஏற்கப்பட்டதற்கு சான்றாக, சி.எஸ்.ஆர்., எனப்படும் சமூக சேவை பதிவேடு ரசீது வழங்குவர்.
தற்போது, இந்த நடைமுறைக்கு பதிலாக, ‘ஆன்லைன்’ வாயிலாக புகார் அளித்து, இ – சி.எஸ்.ஆர்., எனும் மின்னணு ரசீது பெறும், புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இது குறித்து, டி.ஜி.பி., மகேஷ்குமார் அகர்வால், நேற்று அளித்த பேட்டி:
பொது மக்கள், இனி, காவல் துறையின் இணையதளமான, www.tn.police.gov.in என்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்து, உடனடியாக, இ – சி.எஸ்.ஆர்., ரசீது பெற்றுக் கொள்ளலாம். இந்த ரசீது பெற்ற மூன்று நாட்களில், போலீஸ் நிலையங்களுக்கு நேரடியாக சென்று, போலீசாரிடம் நடந்த சம்பவம் குறித்து தெரிவிக்கலாம்.
அவர்கள், முதல்கட்ட விசாரணை செய்து, முறைப்படி சி.எஸ்.ஆர்., ரசீது வழங்குவர். எப்.ஐ.ஆர்., எனப்படும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யக்கூடிய குற்றம் நடந்து இருந்தால், வழக்குப் பதிவு செய்வர். அதன்பின் கைது நடவடிக்கை உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவர். மொபைல் போன், இரு சக்கர வாகனம் திருட்டு உள்ளிட்ட குற்றங்களுக்கு, எப்.ஐ.ஆர்., எனும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
இதற்கு தீர்வு காண, மொபைல் போன் திருட்டு உள்ளிட்ட குற்றங்களுக்கு, இ – எப்.ஐ.ஆர்., எனும் மின்னணு முதல் தகவல் அறிக்கை பெறும் நடைமுறையும், விரைவில் அமலுக்கு வர உள்ளது. தமிழகத்தில், அரசியல் ரீதியான போராட்டங்கள், நடப்பு ஆண்டில், 30 சதவீதம் உயர்ந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கொலைகள் ( ஜன., நவம்பர் வரை)
2022 | 1,484
2023 | 1,469
2024 | 1,383
2025 | 1,346
2026 (ஜன, – நவ., 15 வரை) | 1,306
கொலைக்கான காரணம் | எண்ணிக்கை | சதவீதம்
குடும்பத் தகராறு | 360 | 28.4
சிறிய தகராறு / வாய்தகராறு | 290 | 22.9
திருமணத்துக்கு மீறிய உறவு / முறையற்ற உறவு | 162 | 12.8
மது போதையில் ஏற்பட்ட தகராறு | 167 | 13.2
முன்விரோதம் | 89 | 7.0
நிலம் / சொத்து தகராறு | 56 | 4.4
காதல் விவகாரம் / பாலியல் காரணங்கள் | 55 | 4.3
பணப் பரிவர்த்தனை தொடர்பான தகராறு | 54 | 4.3
இதர காரணங்கள் | 10 | 0.8
ரவுடித்தனம் தொடர்பான கொலை | 11 | 0.9
காரணம் தெரியவில்லை | 3 | 0.2
தொழில் போட்டி | 4 | 0.3
உள்நோக்கமும் இல்லாத மனநோய் சார்ந்த கொலை | 2 | 0.2
அரசியல் கொலை | 2 | 0.2
பாலியல் வன்கொடுமையுடன் மனநோய் சார்ந்த கொலை | 1 | 0.1
ஜாதி ரீதியான முன்விரோதக் கொலை | 1 | 0.1
