அயல் பணி போலீசார் 984 பேர் அசல் பணிக்கு திரும்ப டி.ஜி.பி., உத்தரவு
அயல் பணி போலீசார் 984 பேர் அசல் பணிக்கு திரும்ப டி.ஜி.பி., உத்தரவு
ADDED : ஆக 21, 2025 10:37 PM
சென்னை:'ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக அயல் பணி என, ஒரே இடத்தில் இருக்கும் எஸ்.ஐ.,க்கள் மற்றும் போலீசார் 984 பேர், வரும் 28ம் தேதிக்குள் அவரவர் சொந்த பணியிடங்களுக்கு திரும்ப வேண்டும்' என, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
காவல் துறையில் பொருளாதார குற்றப்பிரிவு, சிவில் சப்ளை சி.ஐ.டி., மற்றும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, சி.பி.சி.ஐ.டி., உள்ளிட்ட சிறப்பு பிரிவுகள் உள்ளன.
இவற்றில், ஆயுதப்படை மற்றும் காவல் நிலையங்களில் பணிபுரியும் போலீசார், அயல் பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அவர்கள், ஒரே இடத்தில் மூன்று மற்றும் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது குறித்து, காவல் துறையின் நிர்வாக பிரிவு டி.ஜி.பி., வெங்கட்ராமன் மற்றும் ஐ.ஜி., பாலகிருஷ்ணன் ஆகியோர், சிறப்பு பிரிவுகளில் பல ஆண்டுகளாக போலீசார் பணிபுரிந்து வருவது பற்றி, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
இதையடுத்து, மாநிலம் முழுதும் சிறப்பு பிரிவுகளில் பணிபுரியும் எஸ்.ஐ., மற்றும் போலீசார் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதில், 984 பேர் பணியாற்றி வருவது தெரிய வந்துள்ளது.
இவர்கள், வரும் 28ம் தேதிக்குள், அவரவருக்கு ஒதுக்கப்பட்ட காவல் நிலையம் உள்ளிட்ட அசல் பணியிடங்களுக்கு திரும்ப வேண்டும் என, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டு உள்ளார்.