UPDATED : செப் 06, 2025 12:49 AM
ADDED : செப் 05, 2025 11:35 PM

சென்னை : முழுக்க முழுக்க மக்களின் சேவைக்காகவும், தேச நலனுக்காகவும், 1951ம் ஆண்டு இதே நாளில், மிகச்சிறந்த சமூக சிந்தனையாளரும், அறிஞருமான டி.வி.ராமசுப்பையரால், கேரளாவின் திருவனந்தபுரத்தில் துவக்கப்பட்ட, 'தினமலர்' நாளிதழ் இன்று, தன் 75வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. டி.வி.ராமசுப்பையர், 'வியர்வை சிந்தியும், வலிகளை அனுபவித்தும் செல்வம் ஈட்டுவதன் நோக்கமே, தேவைஉள்ளவர்களுக்கும், தகுதியானவர்களுக்கும் அதன் மூலமாக சேவை செய்வதற்காகத் தான்' என்று கூறினார்.
அந்த உயரிய நோக்கத்தால், 3,000 பிரதிகளுடன் துவக்கப்பட்ட 'தினமலர்' நாளிதழ் இன்று, பல கோடி வாசகர்களை தினமும் சென்றடைகிறது. தேசியம், தெய்வீகம் ஆகிய இரு கொள்கைகளையும் சிரமேற்கொண்டு சீரிய நடைபோடுகிறது.
மக்களின் சிந்தனையை, 'தினமலர்' பிரதிபலிக்கிறது என்பதற்கான அங்கீகாரம் இது என்ற கருத்து ஒரு பக்கம் இருந்தாலும், மிகவும் நம்பகமான, உண்மையை வெளிக்கொணரும் செய்திகளை வெளியிடுகிறது.
தொழில் முனைவோர், அரசியல்வாதிகள், அரசு ஊழியர்கள், மாணவர்கள், சாமானியர்கள் என அனைத்து தரப்பினரும், அவரவர் வாழ்க்கையில் முன்னேற உறுதுணையாக இந்நாளிதழ் விளங்குகிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
'தினமலர்' நாளிதழின் ஆசிரியர் கி.ராமசுப்பு கூறியதாவது:
முதல் தலைமுறையிலிருந்து, மூன்றாம் தலைமுறை வரை, 'தினமலர்' நாளிதழுக்கான வாசகர்கள் தினமும் பெருகி வருவது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
எட்டு ரூபாய் கொடுத்து, 'தினமலர்' நாளிதழ் வாங்கும் வாசகர்கள் தான் எங்கள் முதலாளிகள் என்ற எண்ணம் சிறிதும் சிதறாமல் பணியாற்றி வருகிறோம்.
'பல கோடி வாசகர்களை பெற்றுள்ள 'தினமலர்' நாளிதழ், நிறுவனரின் எண்ணத்தை நிறைவேற்றும் வகையில், என்றென்றும் பணியாற்றும்' என, அதன் முன்னாள் ஆசிரியரும், என் தந்தையும், என்றும் நினைவில் நிற்பவருமான டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.
நிறுவனர் டி.வி.ஆர்., மகன்களின் நல்லாசியுடன், 'தினமலர்' பீடுநடை போட, அவர்களின் வாரிசுகள் அனைவரும் உழைப்போம்.
'தினமலர்' வளர்ச்சிக்கு உறு துணையாக இருக்கும் வாசகர்களுக்கும், விற்பனையாளர்களுக்கும், விளம்பரதாரர் களுக்கும் நன்றி தெரிவித்து, பவள விழா கொண்டாட்டத்தின் இனிய தொடக்கத்திற்கான மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.