/
தினம் தினம்
/
தினமலர் பவள விழா
/
நீதிமன்ற சுய வழக்குகளில் தனிப்பெருமை பெற்றவை 'தினமலர்' செய்திகள்
/
நீதிமன்ற சுய வழக்குகளில் தனிப்பெருமை பெற்றவை 'தினமலர்' செய்திகள்
நீதிமன்ற சுய வழக்குகளில் தனிப்பெருமை பெற்றவை 'தினமலர்' செய்திகள்
நீதிமன்ற சுய வழக்குகளில் தனிப்பெருமை பெற்றவை 'தினமலர்' செய்திகள்
PUBLISHED ON : மார் 21, 2026 12:00 AM

சட்டமன்றம், அரசு நிர்வாகம், நீதித்துறை, ஊடகம் ஆகியவை, மக்களாட்சி மாண்பினை தாங்கி நிற்கும் ஜனநாயகத்தின் நான்கு துாண்கள். தேர்தலில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளால் சட்டமன்றத்தில் இயற்றப்படும் சட்டங்களை ஆராய்ந்து, அமல்படுத்தும் பொறுப்பினை கொண்டது நீதித்துறை.
நாட்டில் குடிமக்களின் எண்ணங்களை, எதிர்பார்ப்புகளை, குறைகளை சட்டமன்றம், அரசு நிர்வாகம் மற்றும் நீதித்துறையின் கவனத்திற்கு, செய்தியாக கொண்டுவந்து, கண்முன் நிறுத்தும் உன்னத பணியினை செய்வது ஊடகம்.
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்
தவறுகளை சுட்டிக்காட்டும் பெரியோரை துணையாக கொண்டிருக்காத அரசன், கெடுப்பார் இல்லாவிட்டாலும் தானே கெட்டுப்போவான். அந்த இடித்துரைக்கும் அறப்பணியைத்தான் நீதி வழுவாமல் செய்து வருகிறது , உலகத்தமிழர் மனங்களில் நிரம்பியிருக்கும் தேசிய உணர்வு மிக்க 'தினமலர்'.
பொதுநலன் சார்ந்த பிரச்னைகள், விவகாரங்கள் தொடர்பாக நீதிமன்றத்தில் யாரும் வழக்கு தொடுக்காத நிலையிலும், பத்திரிகையில் வெளியாகும் செய்தியின் அடிப்படையில், நீதிமன்றமே சுயமாக வழக்காக்கி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதும் உண்டு. மக்கள் நலன் சார்ந்த மதிப்புமிகு தீர்ப்புகளை வழங்கிய வரலாறும் உண்டு. நெடுநாள் பிரச்னைகள் பற்றிய குரலற்ற குடிமக்களின் கூக்குரல்கள், நீதிமன்றத்தை எட்டி, நீதிமன்ற உத்தரவு வாயிலாக தீர்வினை எட்டியதும் உண்டு. அவ்வாறு, நீதிமன்றங்களில் சுய வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் செய்திகளில், தவறாமல் தன் தடயத்தை பதித்திட்ட தனிப்பெருமை பெற்றது தான் தினமலர்.
அன்றாடம் வைகறை பொழுதில் என் வீட்டு வாசலில் பூக்கும் தினமலருக்கு நான் 30 ஆண்டுகால வாசகன்!
சமகால சமூக ஊடங்களுடன் போட்டி போட்டு, உண்மை செய்தியை உலகுக்கு சொல்ல, தீரா வேட்கையுடன் ஆறாக ஓடிக்கொண்டிருக்கும், 75 வயது பவளவிழா இளைஞனின் பாய்ச்சல் கண்டு உண்மையிலேயே மெய்சிலிர்த்துப் போகிறேன். தினமலர் என்றாலே சிறப்புதான். அதிலொரு சிறப்பு, அதன் செய்தி தலைப்பு. வாசிப்போரை வசீகரிக்கும் வார்த்தைகளின் பிரவாகம், பிரமாதம்!
பசி நேரத்தில், பந்தியில் வாழை இலையில் பரிமாறப்படும் அறுசுவை விருந்தை, அணு அணுவாக விரும்பி புசிக்கும் விருந்தாளிபோல, காலையில் கண் விழித்ததும் தினமலர் வாசிக்கிறேன் ; தலைப்புகளை நேசிக்கிறேன்.
அரசியல் நடப்பு, மக்கள் பிரச்னை, சமூகத்தின் தேவை, நாட்டின் பொருளாதார போக்கு என, சகலத்தையும் அலசி ஆராய்ந்து, சாமானிய மக்களும் எளிதாக புரிந்துகொள்ளும் எழுத்துநடையில், கரும்புச்சாறாய் பிழிந்து, காகித குவளையில், காலையில் கையில் தரும் தினமலர், என்னை போன்ற லட்சோப லட்சம் வாசகர்களின் அபிமான நாளிதழ்.
அதனால் தான் உள்ளூர் தமிழர் இல்லங்களிலும், உலக தமிழர் உள்ளங்களிலும் அசைக்கமுடியாத நம்பிக்கையை முக்கால் நுாற்றாண்டாக பெற்று, இன்றும் வீறு நடை போட்டுக்கொண்டு இருக்கிறது. தேசியத்தையும் தெய்வீகத்தையும் இரு கண்களாக பாவித்து, இதழியல் அறத்தையும் தரத்தையும் தாங்கி, நுாற்றாண்டு கால நெடுஞ்சாலையில் கம்பீர நடை போட்டுக்கொண்டிருக்கும் தினமலர், இன்னும் பல நுாறாண்டு பயணிக்க, வாசகனாய் வாழ்த்தி பெருமகிழ்வு அடைகிறேன்.
நீதியரசர் எம். துரைசாமி
முன்னாள் பொறுப்பு தலைமை நீதிபதி, சென்னை உயர்நீதிமன்றம் மற்றும்
தலைவர், தமிழ்நாடு கட்டிட மனை விற்பனை மேல்முறையீட்டு தீர்ப்பாயம்

