கருவி தீட்ட பயன்படுத்தப்பட்ட கற்குழிகள் கண்டுபிடிப்பு
கருவி தீட்ட பயன்படுத்தப்பட்ட கற்குழிகள் கண்டுபிடிப்பு
ADDED : செப் 06, 2025 01:21 AM

சென்னை:திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே, புதிய கற்காலத்தைச் சேர்ந்த கற்கருவிகளை தீட்டிய கற்குழிகள் கண்டறியப்பட்டு உள்ளன.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஒன்றியம் கருக்கம்பாளையம் கிராமத்துக்கு அருகேயுள்ள கணேசபுரத்தில், பாறையில் கற்குழிகள் இருப்பதை அறிந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ரமேஷ், யாக்கை மரபு அறக்கட்டளை குழுவினருக்கு தகவல் அளித்தார்.
அவர்கள் அங்கு சென்று ஆய்வு செய்தனர். அதில், 70க்கும் மேற்பட்ட குழிகளை அடையாளம் கண்டனர். பல்வேறு நீள, அகல, ஆழங்களில் இருந்த அக்குழிகளில், 40 செ.மீ., நீளம், 15 செ.மீ., அகலமுள்ள, 4 செ.மீ., ஆழமுள்ள குழி சற்று பெரிதாக இருந்தது.
அதேபோல, தலா 13 செ.மீ., நீள, அகலத்துடன், 1.5 செ.மீ., ஆழமுள்ள குழி சிறியதாக அடையாளம் காணப்பட்டு உள்ளது.
இதே அமைப்பினர், சமீபத்தில் இந்த ஊரில் இருந்து, 8 கி.மீ., தொலைவில் உள்ள தத்தனுாரில் இதே போன்ற குழிகளை அடையாளப்படுத்தினர். ஆனாலும், இரண்டு இடங்களிலும் உள்ள குழிகள் தனித்துவமாக உள்ளன.
இது குறித்து, யாக்கை மரபு அறக்கட்டளையின் செயலர் குமாரவேல் கூறியதாவது:
வரலாற்று காலத்துக்கு முந்தைய புதிய கற்கால மனிதர்கள், இந்த பகுதியில் வாழ்ந்தனர் என்பதற்கான தொல்லியல் சான்றாக கற்குழிகள் உள்ளன. தற்போது, இப்பகுதியில் குடியிருப்புகள் உள்ளதால், கற்குழிகள் அழியும் நிலையில் உள்ளன. ஏற்கனவே இங்கிருந்த சுனை, சாலை அமைக்கும் பணிக்காக மூடப்பட்டதாக கூறப்படுகிறது. அதனால், இங்குள்ள மாணவர்கள் மற்றும் பொது மக்களிடம் இது குறித்து விளக்கினோம்.
இவ்வாறு அவர் கூறினார்.