ADDED : ஆக 01, 2026 01:11 AM

துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தாலுகா, வடக்குப்பட்டி கிராமத்தில் விநாயகர் கோவில், காளியம்மன் கோவில், கருப்பசாமி கோவில்கள் உள்ளன. அந்த கிராமத்தை சேர்ந்த மூன்று சமூக மக்கள், பல ஆண்டுகளாக வழிபாடு நடத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில், ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள், மற்ற இரண்டு சமூகத்தினரை வழிபாடு செய்ய அனுமதிக்க மறுத்ததால் பிரச்னை ஏற்பட்டது. கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில், கடந்த 28ம் தேதி தாசில்தார் அப்பனராஜ் தலைமையில் சமாதான கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், 'கோவில் வழிபாட்டிற்கு யாரும் இடையூறு ஏற்படுத்தக்கூடாது' என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, இருதரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. முதலில் கோவிலில் வழிபாடு அனுமதி மறுக்கப்பட்ட இரண்டு சமூக மக்கள், நேற்று கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தி கூழ் ஊற்ற முயன்ற போது, ஏற்கனவே பிரச்னை செய்த சமூகத்தினர், வழிபாடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமின்றி, கோவில் சாவிகளை எடுத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இருதரப்பினரிடையே பிரச்னை ஏற்படும் சூழ்நிலை உருவானதால், போலீசார் அங்கு சென்று, சட்டம் - ஒழுங்கு பிரச்னை இருப்பதாக கூறி, மூன்று கோவில்களுக்கும் 'சீல்' வைத்தனர். அந்த பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
