85 வயதுக்கு மேற்பட்டோருக்கு தபால் ஓட்டு இன்று முதல் விண்ணப்பம் வினியோகம்
85 வயதுக்கு மேற்பட்டோருக்கு தபால் ஓட்டு இன்று முதல் விண்ணப்பம் வினியோகம்
ADDED : மார் 19, 2024 10:59 PM
லோக்சபா தேர்தலில், 85 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், தபால் ஓட்டளிக்க, தேர்தல் கமிஷன் அனுமதி வழங்கி உள்ளது.
எனவே, ஓட்டுச்சாவடி அலுவலர்கள், தங்கள் பகுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள, 85 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்ளின் வீடுகளுக்கு இன்று முதல் செல்வர்.
அவர்களை சந்தித்து, அவர்களுக்கு தபால் ஓட்டளிக்க விருப்பம் உள்ளதா என்று கேட்பர். விருப்பம் தெரிவித்தால், '12டி' விண்ணப்பங்களை அவர்களிடம் வழங்குவர். அவர்கள் அதை பூர்த்தி செய்து தர வேண்டும். இப்பணி வரும், 25ம் தேதி வரை நடக்கும்.
தபால் ஓட்டளிக்க விருப்பம் தெரிவித்து விண்ணப்பம் அளித்தால், அவர்களுக்கு தேர்தல் தேதிக்கு முன்பாக, ஓட்டுச்சாவடி அலுவலர், வருவாய் துறை அலுவலர், அரசியல் கட்சியினர், ஓட்டுப் பெட்டியுடன், அவர்கள் வீட்டிற்கு செல்வர்.
அவர்களிடம் தபால் ஓட்டை வழங்கி, அவர் எந்த வேட்பாளருக்கு ஓட்டளிக்க விரும்புகிறாரோ அதில் ஓட்டளித்து, அதை ஓட்டுப் பெட்டியில் போட சொல்லி பெற்றுக் கொள்வர். தபால் ஓட்டுப்போட விருப்பம் தெரிவித்தவர்கள், ஓட்டுச்சாவடிக்கு சென்று ஓட்டளிக்க முடியாது. மாற்றுத்திறனாளிகள், 40 சதவீதத்திற்கு மேல் ஊனம் உள்ளவர்களாக இருந்தால், தபால் ஓட்டளிக்கலாம்.

