வெள்ள நிவாரண நிதி ஒதுக்கக்கோரி தி.மு.க., - எம்.பி.,க்கள் ஆர்ப்பாட்டம்
வெள்ள நிவாரண நிதி ஒதுக்கக்கோரி தி.மு.க., - எம்.பி.,க்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 09, 2024 01:38 AM

தமிழகத்துக்கு வெள்ள நிவாரண நிதி ஒதுக்காதது மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பார்லிமென்டில் தி.மு.க., - எம்.பி.,க்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கியதிலிருந்தே தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்களைச் சேர்ந்த காங்கிரஸ், தி.மு.க., இடதுசாரி ஆகிய கட்சிகளின் எம்.பி.,க்கள், மத்திய அரசுக்கு எதிராக பார்லிமென்டின் இரு சபைகளிலும் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
அதிக அளவிலான வரி வருவாய் தங்களது மாநிலங்களில் இருந்து வந்தபோதும், அதிலிருந்து சொற்ப தொகையை மட்டுமே நிதிப் பங்கீடாக மத்திய அரசு ஒதுக்கீடு செய்வதாக இந்த எம்.பி.,க்கள் குரல் எழுப்பி வந்தனர்.
கேரளாவும், கர்நாடகாவும் டில்லி ஜந்தர் மந்தர் பகுதியை முழுவதுமாக நிறைத்து, மிக பிரமாண்டமான அளவில் கூட்டத்தைக் கூட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தி.மு.க., பார்லிமென்டில் தங்கள் எம்.பி.,க்களை வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தியது.
இவர்களோடு தமிழக காங்., விடுதலை சிறுத்தைகள் என, கூட்டணி கட்சி எம்.பி.,க்களும் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தின்போது, 'தமிழகத்தை வஞ்சிக்காதே, மாநில உரிமைகளை பறிக்காதே, மத வெறியை துாண்டாதே' என்பது உள்ளிட்ட கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதன்பின் லோக்சபாவில், தமிழக அரசு கேட்டிருந்த வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு தர வேண்டுமென்று வலியுறுத்தியும், இந்த கோரிக்கை குறித்து அளிக்கப்பட்டிருந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்தும், சபையிலிருந்து தி.மு.க., - எம்.பி.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.
- நமது டில்லி நிருபர் -

