தி.மு.க., - அ.தி.மு.க.,விடம் ராஜ்யசபா 'சீட்' கேட்டு நெருக்கடி: காங்கிரஸ், பா.ம.க., - தே.மு.தி.க., போட்டா போட்டி
தி.மு.க., - அ.தி.மு.க.,விடம் ராஜ்யசபா 'சீட்' கேட்டு நெருக்கடி: காங்கிரஸ், பா.ம.க., - தே.மு.தி.க., போட்டா போட்டி
UPDATED : மே 18, 2025 04:11 AM
ADDED : மே 18, 2025 01:38 AM

சென்னை ;தி.மு.க., - அ.தி.மு.க., கூட்டணியில் உள்ள கட்சிகள், ராஜ்யசபா எம்.பி., பதவி கேட்டு நெருக்கடி கொடுக்க துவங்கியுள்ளன. காங்கிரஸ் - பா.ம.க., -- தே.மு.தி.க., - ம.தி.மு.க., மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள், இதில் போட்டா போட்டி போடுவதால், அடுத்த மாதம் நடக்கவுள்ள ராஜ்யசபா தேர்தல், தமிழக அரசியலில் அணி மாற்றத்திற்கு வித்திடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜ்யசபா எம்.பி.,யாக உள்ள தி.மு.க.,வின் அப்துல்லா, சண்முகம், வில்சன், அ.தி.மு.க.,வின் சந்திரசேகரன், பா.ம.க., தலைவர் அன்புமணி, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ ஆகிய ஆறு பேரின் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதி முடிகிறது.
அதனால், இந்த ஆறு ராஜ்யசபா எம்.பி., பதவிகளுக்கான தேர்தல் ஜூனில் அறிவிக்கப்பட உள்ளது. இதில், தி.மு.க., கூட்டணிக்கு நான்கு எம்.பி., பதவிகள் உறுதியாக கிடைக்கும். தி.மு.க., தலைமை ஐந்தாவது வேட்பாளரை நிறுத்தாவிட்டால், அ.தி.மு.க.,வுக்கு இரண்டு எம்.பி., பதவிகள் கிடைத்து விடும்.
இல்லையெனில், இரண்டாவது எம்.பி., பதவியை பெற, பன்னீர்செல்வம் அணியின் எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் பா.ம.க., - பா.ஜ., ஆதரவு வேண்டும்.
சிக்கலில் தி.மு.க.,
கடந்த 2019ல், தி.மு.க., ஆதரவுடன் ராஜ்யசபாவுக்கு சென்ற ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, இந்த முறையும் அதை எதிர்பார்க்கிறார். தங்களுக்கு ஒரு பதவி வேண்டும் என மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.
இதற்கிடையில், 17 எம்.எல்.ஏ.,க்களை கொண்டுள்ள காங்கிரஸ், 'ஆட்சியில் தான் பங்கு தரவில்லை; இரண்டாவதாக இப்போதும் ராஜ்யசபா எம்.பி., பதவி தாருங்கள்' என்று கேட்கிறது.
சமீபத்தில் நடந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், தென் மாவட்டத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ., ஒருவர், 'ராஜ்யசபா எம்.பி., பதவியை தி.மு.க.,விடம் கேட்க வேண்டும்' என்றார்.
அதை ஏற்ற தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், 'கண்டிப்பாக கேட்க வேண்டும்; காங்கிரசுக்கு அந்த உரிமை இருக்கிறது' என்று கூறியுள்ளார்.
இதில் யாருக்காவது கொடுத்தால், நான்கு எம்.எல்.ஏ.,க்களை வைத்துள்ள திருமாவளவனை, தி.மு.க., சமாதானப்படுத்த வேண்டியிருக்கும். கமலின் ம.நீ.ம., கட்சிக்கு, ஒரு ராஜ்யசபா எம்.பி., பதவி தருவதாக தி.மு.க., ஏற்கனவே ஒப்பந்தம்செய்துள்ளது.
நிபந்தனை
கடந்த மாதம் 11ம் தேதி சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணியை உறுதிப்படுத்தினார்.
பா.ம.க., - தே.மு.தி.க., உள்ளிட்ட கட்சிகளையும் இப்போதே கூட்டணியில் சேர்த்து, தி.மு.க.,வுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்றும் அவர் நினைக்கிறார்.
அதைத் தொடர்ந்து, பா.ஜ., தரப்பில், பா.ம.க., - தே.மு.தி.க.,விடம் கூட்டணி தொடர்பாக பேசியுள்ளனர். 2020ல், த.மா.கா., தலைவர் வாசனுக்கு ராஜ்யசபா எம்.பி., பதவியை அ.தி.மு.க., வழங்கியது.
பா.ஜ.,வுக்கு நேரடியாக எம்.பி., பதவி கொடுக்க விரும்பாத பழனிசாமி, பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதால், வாசனுக்கு வழங்கியதாக கூறப்படுகிறது.
அதேபோல, பழனிசாமியிடம் பேசி ராஜ்யசபா எம்.பி., பதவி பெற்றுத் தர வேண்டும் என பா.ம.க.,வும், தே.மு.தி.க.,வும் நிபந்தனை விதிப்பதாக பா.ஜ., தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்பார்ப்பு
ஒரு ராஜ்யசபா பதவி தருவதாக அ.தி.மு.க., முன்பே உறுதி அளித்தது என, தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா கூற, அதை பழனிசாமி மறுத்துள்ளார்.
இந்நிலையில், தமிழக பா.ஜ., தலைவர் பதவியிலிருந்து மாற்றப்பட்ட அண்ணாமலைக்கு, ராஜ்யசபா எம்.பி., பதவி வழங்குவது குறித்து, அக்கட்சி தலைமை ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ராஜ்யசபா எம்.பி., பதவி கிடைக்காமல் ஏமாற்றம் அடையும் கட்சிகள், வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் தொடருமா; அணி மாற்றம் உருவாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதேநிலை தான் அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியிலும் உள்ளது. இதனால், வரப்போகும் ராஜ்யசபா தேர்தல், சில திருப்பங்களை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.