டங்ஸ்டன் திட்டத்தை தாமதமாக எதிர்த்த தி.மு.க., * பழனிசாமி புகார்
டங்ஸ்டன் திட்டத்தை தாமதமாக எதிர்த்த தி.மு.க., * பழனிசாமி புகார்
ADDED : ஜன 28, 2025 07:30 PM
சென்னை:டங்ஸ்டன் சுரங்க திட்டத்திற்கு, தி.மு.க., அரசு தாமதமாக எதிர்ப்பு தெரிவித்ததாக, தன்னை சந்தித்த போராட்ட குழுவினரிடம், பழனிசாமி தெரிவித்தார்.
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை, சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து, டங்ஸ்டன் எதிர்ப்பு போராட்ட குழுவினர் நன்றி தெரிவித்தனர். அவருக்கு பச்சை நிற தலைப்பாகை அணிவித்தனர்.
மதுரை, மேலுார் அரிட்டாபட்டி பகுதியில், டங்ஸ்டன் சுரங்க திட்டத்திற்கு, மத்திய சுரங்கத் துறை ஏலம் விட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பா.ஜ., - தி.மு.க., உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் இத்திட்டத்தை எதிர்த்தன. இதனால், டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிடுவதாக, மத்திய அரசு அறிவித்தது.
இந்நிலையில், போராட்ட குழுவினர் மத்தியில், பழனிசாமி பேசியதாவது:
விவசாயிகள், பொது மக்கள் ஒற்றுமையாக இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு, அரிட்டாபட்டி பகுதி மக்களே உதாரணம். டங்ஸ்டன் திட்டத்தை, அ.தி.மு.க., கடுமையாக எதிர்த்தது.
டங்ஸ்டன் ஏலம் விடும் பணி துவங்கி, டெண்டர் விடப்பட்டு, 9 மாதங்களாக, தி.மு.க., அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. யாருக்கோ உதவி செய்ய டெண்டரை எதிர்க்கவில்லை. மக்கள் போராட்டம் வெடித்ததால், வேறு வழியின்றி தாமதமாக, தி.மு.க., எதிர்த்தது. இதை மக்கள் உணர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

