ADDED : நவ 05, 2024 09:13 PM
திருச்சி: வரும் டிச., 6ல் சென்னையில் நடக்க திட்டமிட்டிருக்கும் அம்பேத்கர் தொடர்புடைய புத்தக வெளியீட்டு விழாவில் வி.சி.,க்கள் தலைவர் திருமாவளவனும், த.வெ.க., தலைவர் நடிகர் விஜயும் கலந்து கொள்வர் என்ற தகவல் பரவியது. தி.மு.க., கூட்டணியில் இருக்கும் திருமாவளவன், தி.மு.க.,வை எதிர்த்து அரசியல் செய்ய வந்திருக்கும் நடிகர் விஜயோடு, எப்படி ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியும் என அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில், நேற்று திருச்சியில் பேட்டி அளித்த திருமாவளவன், தி.மு.க., கூட்டணியில் தான் தொடருகிறோம் என அடித்துக் கூறியிருக்கிறார். ஆனால், டிச., 6 நிகழ்ச்சி குறித்து, கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவித்திருக்கிறார்.
இந்தப் பேட்டிக்குப் பின், இது தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கும் அரசியல் பார்வையாளர்கள் சிலர், 'தி.மு.க., நெருக்கடிக்குப் பணிந்தே, திருமாவளவன் இப்படி கூறியிருக்கிறார்' என கருத்துச் சொல்லி உள்ளனர்.
திருமாவளவன் அளித்த பேட்டி:
கடந்த 7 ஆண்டுகளாக தி.மு.க., தலைமையிலான மதசார்பற்ற கூட்டணியில் இருக்கிறோம்; வெற்றிகரமாக இயங்கி வருகிறோம். அகில இந்திய அளவில், இண்டியா கூட்டணியிலும் இடம் பெற்று இருக்கிறோம்.
இந்த கூட்டணியை உருவாக்கியதில் வி.சி., கட்சிக்கு பெரும் பங்கு உண்டு. எனவே, நாங்களும் இணைந்து உருவாக்கிய இந்த கூட்டணியை வலுப்படுத்தி, அதை முன்னெடுத்து செல்வதில் தான் எங்கள் கவனம் உள்ளது. இந்த கூட்டணியை விட்டு, வேறு எங்கும் செல்ல வேண்டிய அவசியமில்லை.
வி.சி., கட்சி மீது சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் சிலர் செயல்படுகின்றனர். இதனால், வி.சி.,க்கள் மீதான நம்பகத்தன்மை குறைகிறது. எங்களுக்கு எப்போதும் ஊசலாட்டம் இருந்ததில்லை. வரும், 2026 தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் தான் வி.சி., இடம்பெறும்.
இதில் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில, இனி யாரும் என்னிடம் கேள்விகள் கேட்கக் கூடாது.
அம்பேத்கர் தொடர்புடைய புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்பது தொடர்பாக ஓராண்டுக்கு முன் பேசினர். அதில் கலந்து கொள்வது என முடிவெடுத்தோம். அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்., 14ல் முதல்வர் ஸ்டாலின் புத்தகத்தை வெளியிடுவார் என்று சொல்லி இருந்தனர். ராகுலையும் அழைக்க திட்டமிட்டு இருப்பதாகவும் சொன்னார்கள். புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என என்னிடமும் கட்டுரை கேட்டிருந்தனர். 40 தலைவர்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு தான் புத்தகமாக வெளியிடப்பட உள்ளது. ஏப்., 14ல் நடக்க வேண்டிய வெளியீட்டு விழா தள்ளிப்போனது.
அதன்பின் த.வெ.க., மாநாடு நடைபெறும் முன், நடிகர் விஜய்க்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது, அவர் நிச்சயம் நிகழ்ச்சிக்கு வருவார் என்றும் தெரிவித்தனர். நடிகர் ரஜினி பங்கேற்பதாகவும் கூறினர். தற்போது புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பங்கேற்க போவதாக தகவல் வெளியாகி இருக்கும் சூழலில், நிகழ்வில் வி.சி.,க்கள் பங்கேற்பது குறித்து, கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.