ADDED : ஜன 28, 2024 11:37 PM
மதுரை, ஜன. 29-
மதுரை, ஜெய்ஹிந்த்புரம், எம்.கே.புரத்தை சேர்ந்தவர் திருமுருகன், 43; மதுரை மாநகராட்சி 7வது வட்ட தி.மு.க., செயலர். நேற்று முன்தினம் இரவு வீட்டு வாசலில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்னையே கொலைக்கு காரணம் என, தெரிந்தது.
அவரது மருமகன் ராஜா, அவரது மனைவி நந்தினி உள்ளிட்டோரிடம் ஜெய்ஹிந்த்புரம் இன்ஸ்பெக்டர் கதிர்வேல் விசாரிக்கிறார்.
போலீசார் கூறியதாவது:
திருமுருகனின் சித்தப்பா மகன் தவக்குமார். இருவரும், 2009ல் நடந்த ஒரு கொலை வழக்கில் கைதாகி பின் விடுதலை செய்யப்பட்டனர். தவக்குமார் மகள் நந்தினி, மைனராக இருந்தபோது, ராஜா திருமணம் செய்தார்.
இதுகுறித்து, திருமுருகன் புகாரில், 'போக்சோ' சட்டத்தில் ராஜா கைது செய்யப்பட்டார். இதில் இருந்தே இருவருக்கும் மோதல் உருவானது.
நந்தினி சகோதரிக்கும் திருமணம் நடந்தது. நாளடைவில் திருமுருகன் தலையீட்டால், அவரது வீட்டிலும் குழப்பம் ஏற்பட்டது. இதனால் திருமுருகன் மீது ராஜா, நந்தினி ஆத்திரத்தில் இருந்தனர்.
நேற்று முன்தினம் இரவு திருமுருகன் வீட்டின் கதவை தட்டி, அவரை வெளியே வரச்செய்து வெட்டிக்கொலை செய்துள்ளனர். அவர்களிடம் விசாரிக்கிறோம். இறந்த திருமுருகனுக்கு மனைவி, இரண்டு மகள்கள், மகன் உள்ளனர். இவ்வாறு கூறினர்.