தொண்டர்கள் விரும்பும் கூட்டணி அமையும்: தே.மு.தி.க., பொதுச்செயலாளர் பிரேமலதா பேச்சு
தொண்டர்கள் விரும்பும் கூட்டணி அமையும்: தே.மு.தி.க., பொதுச்செயலாளர் பிரேமலதா பேச்சு
ADDED : நவ 24, 2025 07:09 AM

திருப்பரங்குன்றம்: 2026 தேர்தலில் தொண்டர்கள் விரும்பும் மாபெரும் கூட்டணி அமையும் என தே.மு.தி.க., பொதுச்செயலாளர் பிரேமலதா திருப்பரங்குன்றத்தில் பேசினார்.
உள்ளம் தேடி இல்லம் நாடி நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் பேசியதாவது: மக்களைத் தேடி மக்கள் தலைவர் ரத யாத்திரையும், உள்ளம் தேடி இல்லம் நாடி ஆகிய இரண்டு திட்டங்களை திருப்பரங்குன்றத்தில் துவக்குவதில் மகிழ்ச்சி. முருகன் அருளால் நமது கட்சி துவக்கப்பட்ட இடத்தில், நமது சின்னம் வென்ற தொகுதியில் மக்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.
2026 தேர்தலில் தொண்டர்கள் விரும்பும் கூட்டணி உறுதியாக அமைப்போம்.
திருப்பரங்குன்றம், மதுரை மத்தி ஏற்கனவே தே.மு.தி.க., வென்ற தொகுதிகள். மீண்டும் இரண்டு இடங்களிலும் வெற்றி பெறுவோம்.
எய்ம்ஸ் மருத்துவமனை ஆரம்பிக்கிறோம் எனக்கூறி பணிகள் தாமதமாக நடக்கிறது. எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஒரு செங்கலை காண்பித்தே துணை முதல்வர் ஆனவர் உதயநிதி. எய்ம்ஸ் மருத்துவமனை நிச்சயமாக வரும். மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை ரத்து செய்துள்ளனர்.
வெற்றி பெற்று தே.மு.தி.க., எம்.எல்.ஏ., க்களுடன் பிரதமரை சந்தித்து மெட்ரோ ரயில் திட்டம் வேண்டும் என குரல் கொடுப்போம். மல்லிகை சென்ட் தொழிற்சாலை அமைக்கப்படும்.
தொழில்கள் அதிகம் வந்தால் தான் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். விவசாயமும், தொழில்களும் நிறைந்த ஒரு தொகுதியாக திருப்பரங்குன்றத்தை நிச்சயம் தரம் உயர்த்துவோம்.
எங்கு பார்த்தாலும் கனிமவள கொள்ளை, மணல் கொள்ளை, மலைகள் கொள்ளை, மரங்கள் கொள்ளை, நாட்டையே கொள்ளையடித்து சூறையாடிக் கொண்டிருக்கின்றீர்கள். வெள்ளையனே வெளியேறு என கூறிவிட்டு தற்போது கொள்ளையரிடம் நாட்டை கொடுத்து விட்டு சென்று விட்டனர் நமது உண்மை தலைவர்கள், விஜயகாந்த் உள்பட.
கல்வி மருத்துவத்தை முற்றிலும் இலவசமாக கொடுங்கள். மற்றதை இலவசமாக கொடுக்காதீர்கள். ஓட்டுக்கு ரூ. 500 கொடுத்து ஐந்து ஆண்டுகளை திருடி விடுகிறீர்கள். இது என்ன நியாயம் என்றார்.

