தி.மு.க. ஆட்சி விரைவில் ஆம்புலன்சில் செல்லும்! எம்.எல்.ஏ. பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டி
தி.மு.க. ஆட்சி விரைவில் ஆம்புலன்சில் செல்லும்! எம்.எல்.ஏ. பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டி
ADDED : செப் 08, 2025 10:19 PM

'அ.தி.மு.க. வெற்றிப்பாதையில் செல்லும்; தி.மு.க. விரைவில் ஆம்புலன்சில் செல்லும்,'' என, எம்.எல்.ஏ. பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.
பொள்ளாச்சிக்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பழனிசாமி வருகையையொட்டி தனியார் ேஹாட்டல் மேல்தளத்தில், பலுான் பறக்கவிடும் நிகழ்ச்சி நடந்தது. நகர செயலாளர் கிருஷ்ணகுமார், ஒன்றிய செயலாளர்கள் சக்திவேல், செந்தில்குமார், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் ஈஸ்வரமூர்த்தி முன்னிலை வகித்தனர்.
கவுன்சிலர் ஜேம்ஸ்ராஜா, நிர்வாகிகள் அக்னீஸ் முகுந்தன், அருணாச்சலம், நீலகண்டன் மற்றும் பலர் பங்கேற்றனர். எம்.எல்.ஏ. பொள்ளாச்சி ஜெயராமன், பலுானை பறக்கவிட்ட பின், நிருபர்களிடம் கூறியதாவது:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பழனிசாமி, வருகையையொட்டி, 60 அடி உயரத்தில் பலுான் பறக்கவிடப்பட்டது. நாளை மாலை, 6:00 மணிக்கு திருவள்ளுவர் திடலில், ஒரு லட்சம் பேர் வருகை தர உள்ளனர்.
அ.தி.மு.க. வெற்றிப்பாதையில் தான் செல்லும். தி.மு.க. விரைவில் ஆம்புலன்ஸில் செல்லும். அ.தி.மு.க. கூட்டங்களில் ஆம்புலன்ஸ் விட்டு குழப்பம் செய்து, தொண்டர்களுக்கு அவப்பெயர் உண்டாக்கும் தி.மு.க.வுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவர்.
தமிழகத்தில் மின்சார கட்டணம், வரி உயர்வு காரணமாக தொழில்கள் நசிந்து வருகின்றன. தொழிற்சாலைகள் வேறு மாநிலத்துக்கு செல்கின்றன.முதல்வர் ஸ்டாலின் உல்லாச பயணமாக வெளிநாடுகளுக்கு செல்கிறார்.
ஆட்சியில் எவ்வளவு தொழிற்சாலைகள் வந்துள்ளன என வெள்ளை அறிக்கை கொடுக்கலாம் அல்லது எத்தனை தொழில்கள் ஒப்பந்தம் செய்துள்ளது என சட்டசபையில் தெரிவிக்க வேண்டும். இது மக்களை ஏமாற்றும் விளம்பர மாடல் அரசு மட்டுமே. இவ்வாறு, கூறினார்.
பொள்ளாச்சியில், 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' சுற்றுப்பயணமாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பழனிசாமி இன்று இரவு வருகிறார். கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பொள்ளாச்சி வரும் பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு கோதவாடி பிரிவில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
அதன்பின், சி.டி.சி. மேட்டில் கட்சி நிர்வாகிகள் வரவேற்பு கொடுக்கின்றனர். அங்கு இருந்து கோவை ரோட்டில் உள்ள தனியார் ேஹாட்டலில் தங்குகிறார்.நாளை (10ம் தேதி) காலை, 11:00 மணிக்கு தொழில்துறையினர், விவசாயிகள், கைத்தறி நெசவாளர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடக்கிறது.
தொடர்ந்து மாலை, 4:00 மணிக்கு காந்திசிலை வழியாக ராஜாமில் ரோடு, நேதாஜி ரோடு, அம்பராம்பாளையம் சுங்கம் வழியாக ஆனைமலைக்கு செல்கிறார்.அங்கு பேசி முடித்து மீண்டும் மாலை, 6:00 மணிக்கு திருவள்ளுவர் திடலில் மக்கள் மத்தியில் பேசுகிறார்.
உடுமலையில்... உடுமலையில், நாளை (10ம் தேதி) மாலை, 4:30 மணிக்கு, பஸ் ஸ்டாண்ட் அருகே, பேசுகிறார்.உடுமலையில் இரவு தங்குகிறார். 11ம் தேதி காலை, 11:00 மணிக்கு, உடுமலை ஐ.எம்.ஏ.,ஹாலில், விவசாயிகள், தொழில்துறையினர் உள்ளிட்ட பொதுமக்களை சந்தித்து உரையாடுகிறார். மாலை, 4:30 மணிக்கு, மடத்துக்குளம் நால்ரோட்டில், பிரசாரம் மேற்கொள்கிறார்.
அ.தி.மு.க.,பொது செயலாளர் வருகையை முன்னிட்டு, திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.,வுமான, ராதாகிருஷ்ணன் தலைமையில், அக்கட்சியினர் ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். கலை நிகழ்ச்சிகள், பூரண கும்ப வரவேற்பு உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
- நிருபர் குழு -