தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/விஜய்க்கு மிரட்டல் விடுத்த தி.மு.க., - எம்.எல்.ஏ., கைது

விஜய்க்கு மிரட்டல் விடுத்த தி.மு.க., - எம்.எல்.ஏ., கைது

விஜய்க்கு மிரட்டல் விடுத்த தி.மு.க., - எம்.எல்.ஏ., கைது

39


UPDATED : ஜூலை 22, 2026 03:30 PM

ADDED : ஜூலை 20, 2026 11:59 PM

Follow on GoogleFavourite on Google

39

UPDATED : ஜூலை 22, 2026 03:30 PM ADDED : ஜூலை 20, 2026 11:59 PM


39
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடந்த தி.மு.க., பொதுக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் விளாத்திகுளம் தொகுதி எம்.எல்.ஏ., மார்க்கண்டேயன், 'சட்டசபையில் முதல்வர் விஜய் எலும்பை உடைத்து விடுவோம்' என பகிரங்கமாக மிரட்டல் விடுத்தது, சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, மார்க்கண்டேயனை நேற்று காலை போலீசார் கைது செய்தனர்.

தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் த.வெ.க., ஆட்சி அமைந்தது முதல், தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் தொடர்ந்து அரசு மீதும், முதல்வர் மீதும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

'இந்த ஆட்சி ஆறு மாதத்தில் கவிழ்ந்து விடும்' என, முன்னாள் அமைச்சரும், திருச்செந்துார் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ.,வுமான அனிதா ராதாகிருஷ்ணன் தொடர்ந்து பேசி வருகிறார்.

ஜாமின்



இதனால், முதல்வர் விஜய் குறித்து அவதுாறாக பேசியதாக, கடந்த 3ம் தேதி அவர் கைது செய்யப்பட்டு, அன்றே ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் கடந்த 18ம் தேதி நடந்த தி.மு.க., பொதுக் கூட்டத்தில் பேசிய விளாத்திகுளம் தொகுதி தி.மு.க., -- எம்.எல்.ஏ., மார்க்கண்டேயன், பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார்.

அவர் பேசும் போது, ''இவ்வளவு கேவலமான முதல்வரை தமிழகம் மட்டுமல்ல, இந்திய வரலாறே பெற்றது கிடையாது. வரும் தேர்தல்களில், 5 சதவீத ஓட்டுகள் கூட பெற முடியாமல் விஜயும், அவரது கட்சியும் தோற்று போகும். ''முன்னாள் முதல்வர்கள் காமராஜர், அண்ணாதுரை, ஜெயலலிதா போன்றோர் தேர்தலில் தோற்ற போது, எதிர்க்கட்சி தலைவர்கள் நாகரிகமாக பேசினர்.

எலும்பு இருக்காது



''ஆனால், சட்டசபையில் தேடிக் கொண்டிருக்கிறேன்; உன் தகப்பனாரை என்று சொல்கிறானே... நான் கேட்கிறேன்... மானங்கெட்ட தமிழகத்தின் முதல்வர், உன்னை சட்டசபைக்குள் வைத்து பார்த்துக் கொள்கிறோம். நாங்கள் என்ன கோமாளி பயல்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாயா?

''சட்டசபையை பூட்டுவதாக முதல்வர் பேசுகிறார். பூட்டினால் உனக்கு எலும்பு இருக்காது; உடைத்து அனுப்பி விடுவோம்,'' என பகிரங்கமாக மிரட்டல் விடுத்து இருந்தார்.

இது தொடர்பாக, 'மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, த.வெ.க., நிர்வாகிகள் தரப்பில் போலீஸ் ஸ்டேஷன்களிலும், மாவட்ட எஸ்.பி., அலுவலகத்திலும் புகார் அளிக்கப்பட்டன.

இந்நிலையில், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், நேற்று மூன்று பிரிவு களின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் எனக்கூறி, குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜானகி தலைமையிலான போலீசார் நேற்று காலை 6:00 மணியளவில், விளாத்திகுளம் அம்மாள் நகரில் உள்ள மார்க்கண்டேயன் வீட்டிற்கு சென்றனர்.

சம்மன்



அவரிடம், வழக்கு விபரம் அடங்கிய சம்மனை போலீசார் வழங்கினர். அப்போது, 'சபாநாயகர் அனுமதி இல்லாமல் விசாரணைக்கு அழைத்து செல்ல முடியாது; அதை வாங்கி வாருங்கள்' என, போலீசாரிடம் மார்க்கண்டேயன் தெரிவித்தார்.

அப்போது, போலீசாருக்கும், மார்க்கண்டேயன் ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் மார்க்கண்டேயனை கைது செய்த போலீசார், ஜீப்பில் ஏற்றி அழைத்து சென்றனர். போலீஸ் வாகனத்தை மறித்து, தி.மு.க.,வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காலை 10:00 மணியளவில் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்திற்கு மார்க்கண்டேயன் அழைத்து செல்லப்பட்ட தகவல் பரவியதும், கோவில்பட்டி தி.மு.க., - எம்.எல்.ஏ., கருணாநிதி, துாத்துக்குடி மேயர் ஜெகன் மற்றும் நிர்வாகிகள் அவரை சந்திக்க முயன்றனர்.

போலீசார் அனுமதி மறுத்தனர். பகல் 11:30 மணியளவில், முன்னாள் அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ.,க்கள் கருணாநிதி, அப்துல் வகாப் தலைமையில், 500க்கும் மேற்பட்டோர் எஸ்.பி., அலுவலகத்தில் திரண்டனர். மூன்று எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தி.மு.க., மாவட்ட செயலர் கீதா ஜீவன் ஆகிய நான்கு பேரை மட்டும் உள்ளே அனுமதிக்கும்படி, அவர்கள் கோரிக்கை வைத்தும் போலீசார் அனுமதி மறுத்தனர்.

இதனால், போலீசாருக்கும், தி.மு.க.,வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. டி.எஸ்.பி., சுதீர் நடவடிக்கையை கண்டித்து, அவர்கள் கோஷம் எழுப்பினர்.

காவல் துறையை கண்டித்து, கீதா ஜீவன் தலைமையில் கலெக்டர் அலுவலகம் முன், பிரதான சாலையில் தி.மு.க.,வினர் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை கைது செய்த போலீசார், தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். அப்போது, மயக்கம் வருவதால், மருத்துவமனைக்கு செல்வதாக கூறி, அனிதா ராதாகிருஷ்ணன் காரில் புறப்பட்டு சென்றார்.

இதற்கிடையே, மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.,விடம் நடத்தப்பட்ட விசாரணை மாலை 6:45 மணிக்கு நிறைவடைந்தது. மருத்துவ பரிசோதனைக்கு பின், மார்க்கண்டேயனை, துாத்துக்குடி முதலாவது குற்றவியல் நீதித்துறை மாஜிஸ்திரேட் சுமதி முன், போலீசார் ஆஜர்படுத்தினர். இரு தரப்பு வாதத்தையும் கேட்ட மாஜிஸ்திரேட் சுமதி, தமிழக முதல்வர் குறித்து மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதால், மார்க்கண்டேயனை, ஆக., 3ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, அவர் பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டார்.

சட்டத்தின் ஆட்சியா; சாத்தானின் ஆட்சியா? : தி.மு.க., தலைவர் ஸ்டாலின்:
ஆட்சியில் நடக்கும் தவறுகளையும், அவலங்களையும் சுட்டிக்காட்டும் தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் என அனைவரையும், 'டேக் டைவர்ஷன்' மாடலில் த.வெ.க., அரசு தொடர்ந்து வேட்டையாடி வருகிறது. 'அவதுாறு வழக்குகளில் கூட, எதற்கும் தொடர்பில்லாத குற்றப்பிரிவுகளை சேர்க்கிறீர்கள்' என, நீதிமன்றத்திடம் சமீபத்தில் தானே குட்டு வாங்கினீர்கள்.
கைது செய்யப்பட்டுள்ள மார்க்கண்டேயன், தன் வழக்கறிஞர் மற்றும் ஆதரவாளர்களை சந்திக்கக்கூட மறுக்கப்பட்டுள்ளார். அவருக்கான மருந்துகளை வழங்கச் சென்றவர்களும் தடுக்கப்பட்டு உள்ளனர். கைது செய்யப்பட்டவரின் அடிப்படை சட்ட உரிமைகளும், மனித உரிமைகளும் மறுக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா? ஆட்சியாளர்களின் சட்டத்துக்கு புறம்பான உத்தரவுகளை எல்லாம் நிறைவேற்றி, அவர்களின் மனதை குளிர்விப்பது, போலீஸ் துறையினரின் பணி அல்ல. சட்டப்படியும், மனசாட்சிப்படியும் செயல்படுங்கள்; இல்லாவிட்டால், பின்விளைவுகள் ஏற்படும்.
தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி: விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல், தொடர்ந்து தி.மு.க.,வினர் மீது போலீஸ் துறையை ஏவி அடக்க பார்க்கும் த.வெ.க., அரசுக்கு, ஜனநாயக வழியில் தக்க பாடம் புகட்டப்படும். உடனே மார்க்கண்டேயனை விடுதலை செய்ய வேண்டும்.
தி.மு.க., அமைப்பு செயல் ஆர்.எஸ்.பாரதி: தி.மு.க.,வினர் எமர்ஜென்சியை பார்த்தவர்கள். த.வெ.க., அரசால் எத்தனை பேரை சிறையில் வைக்க முடியும்? தி.மு.க., மீது வழக்கு போட்டு, சிறைக்கு அனுப்பி அழித்து விடலாம் என்று நினைத்தால், அவனை விட உலக மகா மடையன் யாரும் இருக்க முடியாது.
எம்.ஜி.ஆர்., கட்சி தொடங்கிய நேரத்தில் மேடையில் அவரை வைத்துக் கொண்டே, கே.ஏ.கிருஷ்ணசாமி பேசுகையில், 'எம்.ஜி.ஆர்., ஆணையிட்டால், கருணாநிதி தலையை கொய்து வருவேன்' என்றார். கே.ஏ.கிருஷ்ணசாமி மீது கருணாநிதியோ, தி.மு.க.,வோ வழக்கு போடவில்லை. அண்ணாதுரையை காங்கிரசார் கீழ்த்தரமாக பேசினர்.
ஜனநாயக நாட்டில் விமர்சனம் செய்ய யாருக்கும் உரிமை உண்டு. சகிப்புத்தன்மையும், விமர்சனங்களை ஏற்றுக்கொள்கிற மனப்பான்மையும் வேண்டும். த.வெ.க., ஆட்சிக்கு சகிப்புத்தன்மையே இல்லை. மற்ற கட்சி எம்.எல்.ஏ.,க்கள் த.வெ.க.,வில் இணைகின்றனர். தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களை இழுக்க முடியாததால் கைது செய்கின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.



கைது ஏன்: அமைச்சர் விளக்கம்
தமிழக மின்சாரம் மற்றும் சட்டத் துறை அமைச்சர் நிர்மல்குமார் கூறியதாவது: முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில், விளாத்தி குளம் எம்.எல்.ஏ., பேசியுள்ளார். அதனால், போலீசார் சட்டப்படி நடவடிக்கை எடுத்துள்ளனர். இதில், எந்த விதிமீறலும் இல்லை.
முதல்வருக்கு கொலை மிரட்டல் விடும் வகையில் பேசுவது, சட்டம் - ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தும். கைது செய்யப்பட்ட எம்.எல்.ஏ.,வை, நீதிமன்ற காவலுக்கு அழைத்து போலீசார் செல்வது, வழக்கமான நடைமுறை; இதிலென்ன உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது? இவர்கள் அனைவரும் நாடகமாடுகின்றனர். இதற்கு முன், கரூர்காரர் கட்டிலுக்கு அடியில் அழுதார்; இன்று காரில் ஏறி மயக்கம் வருவதாக ஒருவர் அழுகிறார்.
சமூக வலைதளத்தில் மின் கட்டணம் அதிகரித்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. இதனால், பொதுமக்களுக்கு இடையூறில்லாமல் மீண்டும் மின் கணக்கீடு செய்ய வேண்டும் என, பொதுவாக சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. தனிப்பட்ட புகார்கள் வந்தால், மறு கணக்கீடு செய்யப்படுகிறது. இதில் தவறு இருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு நிர்மல்குமார் கூறினார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us