'தி.மு.க., வரலாறு மோடிக்கு தெரியாது' : கடலூரில் அமைப்பு செயலாளர் பாரதி பேச்சு
'தி.மு.க., வரலாறு மோடிக்கு தெரியாது' : கடலூரில் அமைப்பு செயலாளர் பாரதி பேச்சு
ADDED : மார் 04, 2024 06:09 AM
கடலுார் : தி.மு.க., வரலாறு பிரதமர் மோடிக்கு தெரியாது என, கடலுாரில் தி.மு.க., அமைப்பு செயலாளர் பாரதி பேசினார்.
கடலுாரில் நடந்த தி.மு.க., பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
மக்களுக்கு தி.மு.க., என்ன செய்தது என பிரதமர் மோடி கேட்கிறார். கிராமங்கள் தோறும் சென்று கேளுங்கள் தி.மு.க., என்ன செய்தது என்று. தமிழகத்தில் பிரதமர் மோடி பொய் பேசி, மக்களை ஏமாற்ற பார்க்கிறார்.
ஜல் ஜீவன் திட்டத்தை பிரதமர் மோடி கொண்டு வந்ததாக பா.ஜ., மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறுகிறார். ஆனால், முன்னாள் முதல்வர் கருணாநிதி, கடந்த 1971ம் ஆண்டிலேயே குடிநீர் வடிகால் வாரியம் அமைத்தார். பிரதமரின் வீடு கட்டும் திட்டம் எவ்வளவு மோசடி என்று தெரியுமா. கருணாநிதி ஆட்சி பொறுப்பேற்றதும், சென்னையில் குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றினார். பெண் காவலர் பதவியை ஏற்படுத்தியவர் கருணாநிதி.
தமிழக பட்ஜெட்டில் 8 லட்சம் பேருக்கு 3 லட்சம் ரூபாய் மதிப்பில் கான்கிரீட் வீடு கட்டித் தரப்படும் என கூறப்பட்டுள்ளது.
தி.மு.க., 50 ஆண்டுகளுக்கு முன்பு செய்ததையே பிரதமர் மோடி இப்போது செய்கிறார். ஆண்களை விட பெண்கள் ஓட்டுகளே தி.மு.க., வுக்கு அதிகம் கிடைக்கும். இதன் காரணமாகவே பிரதமர் மோடி தமிழகத்திற்கு அடிக்கடி வருகிறார். மத்தியில் ஆட்சியில் மாற்றம் ஏற்பட தமிழக முதல்வர் ஸ்டாலின் வகுத்த வழிகாட்டுதலால் பிரதமர் மோடிக்கு பயம் வந்துவிட்டது.
தி.மு.க., வின் வரலாறு பிரதமர் மோடிக்கு தெரியாது. தி.மு.க.,வை அழிக்க நினைத்தவர்கள் வாழ்ந்ததில்லை. இந்தியாவில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் 440 பேரை விலைக்கு வாங்கியவர் மோடி. நடைபெற உள்ள சவாலான லோக்சபா தேர்தலில் பா.ஜ., கூட்டணி 116 இடங்களுக்கு மேல் வெற்றி பெறாது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தி.மு.க., தலைமையிலான கூட்டணி 40 தொகுதியிலும் வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் பேசினார்.

