தி.மு.க., எதிர்கட்சியாகும் அன்புமணி விடுக்கும் சாபம்
தி.மு.க., எதிர்கட்சியாகும் அன்புமணி விடுக்கும் சாபம்
ADDED : பிப் 05, 2025 07:20 PM
சென்னை:'குழு அமைத்து ஏமாற்றாமல், பழைய ஓய்வூதிய திட்டத்தை, தமிழக அரசு நேரடியாக செயல்படுத்த வேண்டும்' என, பா.ம.க., தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழகத்தில், அரசு ஊழியர்களுக்கு எத்தகைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தலாம் என்பதை பரிந்துரைக்க, ஐ.பி.எஸ்., அதிகாரி ககன்தீப்சிங் பேடி தலைமையில், மூவர் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தாமல், தவிர்ப்பதற்கான ஏமாற்று வேலை தான் இக்குழு என்பதில் சந்தேகம் இல்லை.
பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தக் கோரி, கடந்த 20 ஆண்டுகளாக, அரசு ஊழியர்கள் போராடி வருகின்றனர். மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம், வரும் ஏப்ரலில் நடைமுறைக்கு வருகிறது. அதனால், தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. அவற்றிலிருந்து கவனத்தை திசை திருப்பவும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை ஏமாற்றவும், இப்படி ஒரு குழுவை தி.மு.க., அரசு அமைத்துள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பரிந்துரைக்க, அ.தி.மு.க., ஆட்சியில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சாந்தா ஷீலா நாயர், ஸ்ரீதர் தலைமையில் இரு குழுக்கள் அமைக்கப்பட்டும் எதுவும் நடக்கவில்லை. 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவோம்' என, 2021 சட்டசபை தேர்தலில் தி.மு.க., வாக்குறுதி அளித்தது.
ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் கடந்த பிறகு, குழு அமைக்கும் பழைய நாடகத்தையே துாசு தட்டி அரங்கேற்றி உள்ளது. தமிழக அரசு அமைத்துள்ள குழு அறிக்கை அளிப்பதற்குள், தி.மு.க., ஆட்சி முடிவுக்கு வந்துவிடும். எனவே, குழு அமைக்கும் ஏமாற்று வேலையை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை, தமிழக அரசு நேரடியாக செயல்படுத்த வேண்டும். இல்லையெனில், 2026 சட்டசபை தேர்தலுக்கு பிறகு, தி.மு.க., எதிர்க்கட்சியாவது உறுதி.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.