செங்கோட்டையன் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு தி.மு.க., அரசியல் செய்வதாக அ.தி.மு.க., ஆவேசம்
செங்கோட்டையன் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு தி.மு.க., அரசியல் செய்வதாக அ.தி.மு.க., ஆவேசம்
UPDATED : பிப் 12, 2025 07:43 PM
ADDED : பிப் 12, 2025 07:40 PM
ஈரோடு:கோபி எம்.எல்.ஏ., செங்கோட்டையன் வீட்டுக்கு, தன்னிச்சையாக போலீஸ் பாதுகாப்பு வழங்கி, அ.தி.மு.க.,வை உடைக்கும் வகையில், தி.மு.க., செயல்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது.
அ.தி.மு.க.,வில் தன்னை விட ஜூனியர்களான, பழனிசாமி, வேலுமணி, தங்கமணி துவங்கி அனைவரும் தன்னை புறக்கணிப்பதாக, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலக்கத்தில் இருந்து வந்தார். அத்துடன், ஈரோடு புறநகர் மாவட்ட கிழக்கு மாவட்ட செயலரான முன்னாள் அமைச்சர் கருப்பணன், தன்னிடம் இருந்து ஒதுங்கி, பழனிசாமி பக்கம் சாய்ந்ததால், அவருக்கும் முக்கியத்துவம் கொடுப்பதாக புலம்பி வந்தார்.
இந்நிலையில், 'அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை கொண்டு வந்ததாக பழனிசாமிக்கு, விவசாயிகள் சார்பில் நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர்., படம் இல்லாததால், விழாவை புறக்கணித்ததாக செங்கோட்டையன் கூறியிருந்தார். இது அ.தி.மு.க.,வில் திடீர் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஆனால், இந்த விஷயத்தில் செங்கோட்டையன் தரப்பை சமாதானம் செய்ய பழனிசாமி முயற்சிக்கவில்லை.
இதுவும் செங்கோட்டையன் உஷ்ணத்தை அதிகப்படுத்தியது. இதனால், சென்னையில் கட்சி தலைமை அலுவலகத்தில் கானொலி வாயிலாக நடந்த டில்லி அ.தி.மு.க., அலுவலகம் திறப்பு, சென்னையில் நடந்த முக்கிய நிர்வாகிகள் கூட்டம் உள்ளிட்டவற்றை செங்கோட்டையனும் அவருடைய ஆதரவு நிர்வாகிகளும் புறக்கணித்தனர்.
அதேநேரம், , கோபி குள்ளம்பாளையத்தில் உள்ள செங்கோட்டையன் பண்ணை வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய, எஸ்.ஐ., மற்றும் நான்கு போலீசார் பாதுகாப்பு பணிக்கு தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ளனர். வீட்டின் உள்ளே செல்வோர் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டனர். ஈரோடு - கோபி சாலையிலும், போலீசாரை நிறுத்தி, அவரது வீட்டுக்கு செல்வோரை கண்காணித்தனர்.
செங்கோட்டையன் ஆதரவாளர்கள் கூறுகையில், ''செங்கோட்டையன் தரப்பில் போலீஸ் பாதுகாப்பு ஏதும் கேட்கவில்லை. தமிழக அரசு உத்தரவுப்படி, போலீசார் தன்னிச்சையாகவே துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு கொடுத்துள்ளனர். பழனிசாமி, செங்கோட்டையன் மோதலை பெரிதுபடுத்தி, தி.மு.க., அரசியல் ஆதாயம் தேடப் பார்க்கிறது. அது நடக்காது,'' என்றனர்.
ஈரோடு எஸ்.பி., ஜவகர் கூறுகையில், ''கட்சியின் தலைமைக்கு எதிராக செங்கோட்டையன் விமர்சித்துள்ள நிலையில், ஏதும் சட்டம்-ஒழுங்கு பிரச்னை எழுந்துவிடக்கூடாது என்பதற்காகவே பாதுகாப்புக்கு போலீசார் செங்கோட்டையன் வீட்டில் அமர்த்தப்பட்டுள்ளனர். இது வழக்கமான பாதுகாப்பு ஏற்பாடுதான்,'' என்றார்.
'எஸ்கேப்' ஆன செங்கோட்டையன்
அத்திக்கடவு-அவிநாசி
திட்டத்தை நிறைவேற்றியது தொடர்பாக அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு
நடந்த பாராட்டு விழாவில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்த செங்கோட்டையன்
குள்ளம்பாளையம் வீட்டிற்கு, அந்தியூர் மற்றும் சுற்று
வட்டாரங்களைச் சேர்ந்த ஏராளமான அ.தி.முக., தொண்டர்களும், நிர்வாகிகளும்
வந்தனர். அவர்கள் அங்கு சென்றபோது, செங்கோட்டையன் இல்லை; வெளியூர் சென்று
இருந்தார்.
இதற்கிடையில், செங்கோட்டையன் கட்சியில் இருக்கும்
ஆதரவாளர்களுடன் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டு இருக்கிறார் என தகவல் பரவ,
செங்கோட்டையன் வீட்டுக்கு பத்திரிகையாளர்கள் சென்றனர்.
வெகு நேரத்துக்குப் பின், செங்கோட்டையன் வீடு திரும்பினார்.
அப்போது அவர் கூறியதாவது:
நான்
கோவையில் உள்ள பட்டீஸ்வரர் கோவிலுக்கு சென்று வந்தேன். தேங்காய்,
பழத்துடன் கூடிய பூஜை தட்டை பாருங்கள். பொதுக்கூட்ட அழைப்பிதழ் கொடுக்க,
அந்தியூர் பகுதியில் இருந்து கட்சித் தொண்டர்கள் வீடு தேடி வந்துள்ளனர்.
நான் வீட்டில் இருந்தால், தினந்தோறும் என்னை சந்திக்க, 100 முதல், 200 பேர்
வருவர். அதுபோலத்தான் இன்றும் வந்துள்ளனர். மற்றபடி, யாரோடும் நான்
எதற்காகவும் ஆலோசனை நடத்தவில்லை. பழனிசாமிக்கான பாராட்டு விழா
குறித்தெல்லாம் பேசியது, அன்றோடு முடிந்து விட்டது. இனி வேறெதுவும்
சொல்வதற்கில்லை. இப்போதைக்கு ஆளை விடுங்க.
இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.