ADDED : நவ 01, 2025 04:52 AM

ஆத்துார்: “தி.மு.க., ஆட்சி என்றாலே, தினமும் ஒவ்வொரு ஊழல் வெளியே வருகிறது,” என, பா.ம.க., தலைவர் அன்புமணி கூறினார்.
சேலம் மாவட்டம், ஆத்துாரை அடுத்த குமாரபாளையம் பகுதியில், வசிஷ்ட நதியை, பா.ம.க., தலைவர் அன்புமணி நேற்று பார்வையிட்டார். பின், அவர் அளித்த பேட்டி:
இந்திய அளவில், மாசு படிந்த 37 நதிகளில், ஐந்து நதிகள் தமிழகத்தில் உள்ளன. கடந்த ஜூலை முதல், தற்போது வரை, ஏழு முறை மேட்டூர் அணை நிரம்பி, 50 டி.எம்.சி., காவிரி நீர் கடலில் கலந்துள்ளது.
சேலத்தில் மூன்று நதிகள் வாயிலாக பாசனம் பெறும், 1,500 ஏரிகளுக்கு காவிரி உபரி நீர் கிடைக்க, 5,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும்.
ஒரு பகுதியில் இருந்து, 3,200 லாரிகளில் நெல் எடுத்துச் செல்ல, முருகன், கார்த்திகேயன், கந்தசாமி என, மூன்று பேரின் நிறுவனங்களுக்கு, நுகர்பொருள் வாணிப கழகம் வாயிலாக, டெண்டர் வழங்கி, டன்னுக்கு 598 ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளனர்.
உண்மையில், 140 ரூபாய் தான் செலவு ஆகிறது. மேலோட்டமாக, 200 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது; சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும்.
பள்ளிக்கரணை சதுப்பு நிலம், உள்ளாட்சி துறை ஊழல் என்று, தி.மு.க., ஆட்சி என்றாலே ஊழல் தான் என நிரூபித்துள்ளனர்.
தினமும் ஒரு ஊழல் வெளிவருகிறது; இனிமேல் ஒவ்வொரு துறை யில் நடக்கும் ஊழலும் வெளிவரும். ஏதாவது பிரச்னை என்றால், பா.ஜ., மீது குறை சொல்வது தான், தி.மு.க.,வுக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் வேலை. தி.மு.க.,வை வீட்டிற்கு அனுப்பினால் மக்கள் நிம்மதியாக இருப்பர்.
இவ்வாறு கூறினார்.

