இந்திரா நினைவு தின நிகழ்ச்சி மகளிர் காங்கிரஸ் புறக்கணிப்பு
இந்திரா நினைவு தின நிகழ்ச்சி மகளிர் காங்கிரஸ் புறக்கணிப்பு
ADDED : நவ 01, 2025 04:52 AM
சென்னை: இந்திரா நினைவு தினத்தை ஒட்டி, சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்த நினைவஞ்சலி கூட்டத்தை, மகளிரணியினர் புறக்கணித்தனர்.
முன்னாள் பிரதமர் இந்திராவின், 41வது நினைவு தினம், சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்திரா படத்திற்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மலர் துாவி மரியாதை செலுத்தினார். சர்தார் வல்லபாய் படேல் படத்திற்கும் மரியாதை செலுத்தினார்.
அதைத் தொடர்ந்து, இந்திரா நினைவஞ்சலி கூட்டம் நடந்தது. 'இந்திரா ஓர் வீரப்பெண்மணி' என்ற தலைப்பில் வாழ்த்தரங்கம் நடந்தது. அதில் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பேசினார். விழா அழைப்பிதழில், மகளிர் அணி நிர்வாகிகள் பெயர் போடாமல் இருட்டடிப்பு செய்யப்பட்டதால், அவர்கள் அதிருப்தி அடைந்தனர்.
மாநில மகளிர் அணி தலைவர் ஹசீனா சையது, செயற்குழு உறுப்பினர் சுமதி அன்பரசு மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் தனி அணியாக வந்து, இந்திரா படத்திற்கு மரியாதை செலுத்தினர். ஆனால், நினைவஞ்சலி கூட்டத்தில் பங்கேற்க மறுத்து சென்று விட்டனர்.
பின், செல்வப்பெருந்தகை கூறுகையில், ''சென்னை யானைக் கவுனி பகுதியில் உள்ள இந்திரா சிலை மாற்றப்பட்டு, காங்கிரஸ் துணைத் தலைவர் சொர்ணா சேதுராமன் ஏற்பாட்டில், 6 அடி உயர வெண்கல சிலை அமைக்கப்பட உள்ளது,'' என்றார். ஆனால், இந்திரா நினைவு தின நிகழ்ச்சியில் மகளிர் அணியில் கலந்து கொள்ளாததோடு, தனியாக வந்து, இந்திரா படத்துக்கு மரியாதை செய்தது குறித்து எதுவும் தெரிவிக்க வில்லை.

