கோவை பேரூர் பட்டீஸ்வரர், மருதமலை கோவிலில் பாஜ தேசிய செயல் தலைவர் நிதின் நபின் வழிபாடு
கோவை பேரூர் பட்டீஸ்வரர், மருதமலை கோவிலில் பாஜ தேசிய செயல் தலைவர் நிதின் நபின் வழிபாடு
UPDATED : ஜன 11, 2026 06:28 PM
ADDED : ஜன 11, 2026 01:46 PM

கோவை: கோவை வந்துள்ள பாஜ தேசிய செயல் தலைவர் நிதின் நபின் மருதமலை கோவிலிலும், பேரூர் பட்டீஸ்வரர் கோவிலிலும் சுவாமி தரிசனம் செய்தார்.
பாஜ தேசிய செயல் தலைவர் நிதின் நபின் தமிழகம் வந்துள்ளார். கோவையில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
சாமிதரிசனம்

இதனைத் தொடர்ந்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: புண்ணிய பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் வழிபாடு செய்து இன்றைய தினத்தை தொடங்கினோம்.

பாரம்பரிய செழுமை, போற்றுக்கூடிய கட்டிடக் கலை மற்றும் அமைதியான சூழலால் நிறைந்த இந்த பழமையான சிவன் கோவில், பக்தி மற்றும் அமைதியால் நம் மனதை நிறைக்கும் வகையில் திகழ்கிறது. அனைவருக்கும் சிவபெருமான் அருள்பாலித்து, தர்மத்தின் பாதையில் வழிநடத்தட்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தொடர்ந்து, மருதமலையில் சுவாமி தரிசனம் செய்தார். அவருடன் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை ஆகியோர் உடன் சென்றனர்.

பிறகு கோவை, வடவள்ளி பகுதியில் நடந்த மோடி பொங்கல் விழாவில் பங்கேற்று உறியடித்தார்.
பின்னர் அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: சனாதன பண்பாட்டிற்கு ஒரு மகத்தான, பெருமைமிக்க வரலாறு உள்ளது. அதற்கு தமிழ்நாட்டின் பங்களிப்பு உண்மையிலேயே ஒப்பற்றது. இந்தியாவின் ஆன்மா உலகத்திடம் உரையாடிய புண்ணிய பூமி.
அங்கீகாரம்
1892ம் ஆண்டு கன்னியாகுமரியில் உள்ள கடற்கரைப் பாறையில் சுவாமி விவேகானந்தர் மேற்கொண்ட தியானம், ஒரு ஆன்மிக சாதனை மட்டுமல்ல; அது இந்திய மறுமலர்ச்சியின் பிரகடனமாகும். இங்கிருந்தே அவர் தேசத்தின் எழுச்சிக்கான உறுதியை எடுத்துக் கொண்டு, சனாதன சிந்தனையை உலக அரங்கிற்கு எடுத்துச் சென்றார்.
இன்று பிரதமர் மோடியும், தமிழ் மொழிக்கும், தமிழ் பண்பாட்டிற்கும் உலகளாவிய அங்கீகாரத்தை வழங்கி வருகிறார். காசி தமிழ் சங்கமம் போன்ற முயற்சிகள், பார்லிமென்டில் செங்கோல் நிறுவியது மூலம் தமிழர் பெருமையை நிலைநாட்டியது. திருக்குறளின் போதனைகளையும், மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் கருத்துகளையும் தேசிய சிந்தனையுடன் இணைப்பது ஆகியவற்றின் மூலம், தமிழின் பெருமை இமாலய உச்சத்தை எட்டியது.
தமிழ் கடவுள்
பிரதமர் தலைமையில், ராமர் கோவில், காசி விஸ்வநாதர் வழித்தடம், சோமநாத், மத்திய பிரதேசத்தின் மகாகால் லோக் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டங்களின் மூலம், இந்தியா ஒரு முழுமையான மத-பண்பாட்டு மறுமலர்ச்சியை கண்டுள்ளது.
இது பாரதத்தின் பண்டைய ஆன்மிக இறையான்மையும் தேசிய விழிப்புணர்வையும் மீட்டெடுப்பதில் ஒரு சகாப்தம் படைக்கும் தருணமாகும். அதே சமயம், தமிழகத்தின் இந்த மகத்தான பாரம்பரியம், திமுக ஆட்சியின் கீழ் அவமதிக்கப்படுகிறது. தமிழ் கடவுளான முருகனுக்கு தீபம் ஏற்றுதல் முதல் ஹிந்து நம்பிக்கைகளை சிதைப்பது வரை, சனாதன வேள்விகள் தொடர்ந்து கேலி செய்யப்படுகின்றன.
கோவை மண்ணிலிருந்து….!
ஊழல், குடும்ப அரசியல், மற்றும் போலி மத அரசியல் மக்கள் மனதில் தீராத வேதனையை ஏற்படுத்தியுள்ளது. ராமசேதுவை எதிர்த்ததன் மூலம் காங்கிரஸ் தன் வீழ்ச்சிக்கான விதைகளை விதைத்தது போல, கோவையின் புனித மண்ணிலிருந்து நான் உறுதியாக கூறுகிறேன். சனாதன மரபுகளை தொடர்ந்து இகழும் திமுகவின் அரசியல் வீழ்ச்சி இம்மண்ணிலிருந்து துவங்கும்.
ஒரு குடும்பத்தின் பிடியிலிருந்து தமிழகம் விடுபட்டு, நிர்வாகத் திறனற்ற திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி; வளர்ச்சி, பொறுப்புள்ள ஆட்சி, மற்றும் சனாதன நாகரிகச் சிந்தனையில் வேரூன்றிய எதிர்காலத்தை நோக்கி முன்னேறிச் செல்வோம். வாழ்க தமிழகம். வளர்க பாரதம். இவ்வாறு நிதின் நபின் கூறியுள்ளார்.
வடவள்ளி பாஜ மண்டல தலைவர் பாலாம்பிகா வீட்டில் உணவு அருந்தினார். அவருடன் தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, அரவிந்த் மேனன்,சுதாகர் ரெட்டி, ஏ.பி. முருகானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதனைத் தொடர்ந்து சிங்காநல்லூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பாஜ நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.

