'ஆம்புலன்சை வைத்து அரசியல் தி.மு.க., உடனே நிறுத்தணும்'
'ஆம்புலன்சை வைத்து அரசியல் தி.மு.க., உடனே நிறுத்தணும்'
ADDED : செப் 14, 2025 05:03 AM

திருத்தணி: “ஆம்புலன்சை வைத்து அரசியல் செய்வதை தி.மு.க., உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும்,” என பா.ஜ., முன்னாள் தலைவர் தமிழிசை தெரிவித்தார்.
திருத்தணியில் அவர் அளித்த பேட்டி:
பிரதமர் மோடி மணிப்பூருக்கு சென்றுள்ளார். அவருக்கு அங்கே உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இதை, தி.மு.க.,வினர் விமர்சிக்கின்றனர். ஆனால், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 67 பேர் இறந்தனர்; குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல, இன்றுவரை முதல்வர் செல்லவில்லை. தமிழகத்தில் பட்டியலின மக்கள் மீது தொடர் தாக்குதல் நடக்கிறது.
எதிர்க்கட்சித் தலைவர்கள் செல்லும் பிரசார கூட்டங்களுக்கு நடுவே, ஆம்புலன்ஸ் அனுப்பப்படுகிறது.
இப்படியொரு மோசமான அரசியல் நடத்துவதை, தி.மு.க., அரசு உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். உயிர்களை காக்கும் பணியில் இருக்கும் வாகனத்தை வைத்து அரசியல் செய்வது கேவலமானது.
இப்படி போலியாக, பிரசார கூட்டங்களுக்கு மத்தியில் ஆம்புலன்ஸை நோயாளிகள் இன்றி அனுப்பி அரசியல் செய்து விட்டு, பின், உண்மையான நோயாளியை வைத்துக் கொண்டு பிரசார கூட்டங்களுக்கு நடுவே ஆம்புலன்ஸ் சென்றால், நோயாளியின் நிலை என்னாகும்?
கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்களுக்கு, கோவில்களில் உயர் பதவிகள் கொடுக்கின்றனர். 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில், மக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. முகாமில் கொடுத்த மனுக்கள் வைகை ஆற்றுக்குப் போகின்றன.
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முடிந்து, மீன்களுடன் ஸ்டாலின், தவளைகளுடன் ஸ்டாலின் என ஆரம்பிப்பரோ. அதனால் தான், மனுக்கள் அனைத்தும் வைகை ஆற்றுக்குச் செல்கின்றன.
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மக்கள் கூட்டம் அலைமோதுவதை பார்த்தால், நான்கரை ஆண்டுகளாக தி.மு.க., அரசு எதையுமே செய்யவில்லை என்றே தோன்றுகிறது. முதல்வர் ஸ்டாலின், ஆட்சி நடத்தவில்லை. வீடியோ எடுத்து, அதை வெளியிடுவதில் தான் ஆர்வம் காட்டி வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

