'மக்களை ஏமாற்றி வந்த தி.மு.க., மத்திய அரசையும் ஏமாற்றுகிறது' அரிட்டாப்பட்டி ஆர்பாட்டத்தில் பொங்கிய சீமான்
'மக்களை ஏமாற்றி வந்த தி.மு.க., மத்திய அரசையும் ஏமாற்றுகிறது' அரிட்டாப்பட்டி ஆர்பாட்டத்தில் பொங்கிய சீமான்
ADDED : டிச 13, 2024 08:41 PM
மேலுார்:''மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் இருப்பது குறித்து, மத்திய அரசுக்கு தகவல் தெரிவித்ததே தி.மு.க.,வினர் தான்,'' என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டினார்.
இச்சுரங்கம் அமைக்க ஏலம் விடப்பட்ட இடத்திற்கு நேற்று சீமான் சென்றார். அங்கிருந்த மக்களிடம் சுரங்கம் எடுப்பதற்கு எதிராக போராடுவதுடன், அதற்கு ஆதரவு அளிப்பதாகவும் கூறினார்.
இந்த விவகாரத்தையொட்டி மேலூரில் நடந்த ஆர்பாட்டத்தில் பங்கேற்ற சீமான் பேசியதாவது:
தமிழக உயர் நீதிமன்றத்தில் தமிழில் வாதாட உரிமை, நீட் தேர்வு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு 22 தீர்மானங்கள் போடப்பட்டு, அனைத்திற்கும் தி.மு.க., அரசு குழுக்கள் அமைத்தது. புழுக்கள் கூட இரண்டடி நகரும். ஆனால், குழுக்கள் ஒரு அடி கூட நகரவில்லை. மொத்தமாக செயல்பாடே இன்றி கிடக்கிறது. போடப்பட்ட அனைத்து தீர்மானங்களும் வெட்டி தீர்மானங்கள்.
சட்டசபையில் பழனிசாமி பேசும்போது, 'மதுரையில் அமைக்க திட்டமிடப்பட்டிருக்கும் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு, நீங்கள் தான் அனுமதி கொடுத்தீர்கள்' என்றார். அதற்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் துரைமுருகன், 'நீங்கள்தான் அனுமதி கொடுத்தீர்கள்' என மாறி மாறி குற்றம் சாட்டுகின்றனர். சட்டசபையில் உள்ள 200 பேரும் சிறந்த ஆட்டக்காரர்கள். 'ஸ்டாலின் கையெழுத்து இட்டு மீத்தேன், ஈத்தேன் திட்டத்தை நாங்கள் தான் கொண்டு வந்தோம்' என டி.ஆர். பாலு கூறினார். ஆனால், மக்கள் போராட்டம் வெடித்த பின், 'தெரியாமல் கையெழுத்து போட்டோம்' என்றனர்.
நீட் தேர்வு, ஜி.எஸ்.டி., வரியை கொண்டு வந்தவர்கள் காங்கிரஸ் கட்சியினர். அதற்குகூடவே இருந்து ஜால்ரா போட்டவர்கள் தி.மு.க., வினர்.
அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் தீர்மானத்தை தாண்டி போராடுகிறோம். அரசின் தீர்மானத்தை ஏற்கிறோம். நிறைவேற்றி கொடுத்தால் மதிப்போம். ஏனெனில், பல தீர்மானங்கள் வெட்டி தீர்மானங்களாக உள்ளதால், இம்முறை ஏமாற தயாராக இல்லை.
ஏழு மலைகள், 70 ஏரிகள் மற்றும் குளங்கள், சமண படுக்கைகள், 200 நீரூற்றுக்கள், சமண கோயில், வரலாற்று கல்வெட்டுகள் உள்ள அரிட்டாபட்டி கிராமம் வரலாற்று பேராவணம் ஆகும். சுரங்கத்துக்காக அதை அழிக்க விட மாட்டோம். மக்களோடு மக்களாக இருந்து நியாயம் கிடைக்கும் வரை ஓய மாட்டோம்.
மதுரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் இருப்பது குறித்த தகவலை, மத்திய அரசுக்கு தெரிவித்ததே தி.மு.க., தான். ஆனால், இன்றைக்கு மக்கள் எதிர்ப்பு என்றதும், சட்டசபையில் சுரங்கம் அமைவதற்கு விடமாட்டோம் என எதிர்ப்பு தீர்மானம் போடுகின்றனர். இதுவரை மக்களை ஏமாற்றி வந்த தி.மு.க.,வினர், இப்போது மத்திய அரசையும் ஏமாற்றுகின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.