புதிய கிரிமினல் சட்டங்களை எதிர்த்து தி.மு.க.,...உண்ணாவிரதம் ஹிந்தியை திணிக்க முயற்சி என குற்றச்சாட்டு
புதிய கிரிமினல் சட்டங்களை எதிர்த்து தி.மு.க.,...உண்ணாவிரதம் ஹிந்தியை திணிக்க முயற்சி என குற்றச்சாட்டு
ADDED : ஜூலை 06, 2024 10:02 PM

சென்னை: மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கிரிமினல் சட்டங்களை எதிர்த்து, சென்னையில் நேற்று தி.மு.க., சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. அதில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலரும், அமைச்சருமான துரைமுருகன், ஹிந்தியை திணித்து சர்வாதிகாரத்தை நிலைநாட்டவே, கிரிமினல் சட்டங்களில், மத்திய பா.ஜ., அரசு மாற்றங்கள் செய்துள்ளதாக குற்றம் சாட்டினார்.
இம்மாதம் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள மூன்று புதிய கிரிமினல் சட்டங்களை எதிர்த்து, தி.மு.க., சட்டப்பிரிவு சார்பில், சென்னை எழும்பூரில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
தி.மு.க., சட்டப்பிரிவு செயலர் என்.ஆர்.இளங்கோ தலைமையில் நடந்த போராட்டத்தில், அமைச்சர் துரைமுருகன், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஆ.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன், ராஜ்யசபா தி.மு.க., - எம்.பி., சிவா, தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:
மத்திய பா.ஜ., அரசு மூன்று கிரிமினல் சட்டங்களுக்கு, ஹிந்தியில் புதிய பெயர்களை சூட்டிஉள்ளது.
நாக்கில் தர்ப்பை புல்லை தேய்த்தாலும், புதிய வார்த்தைகள் வாயில் வராது. இந்த இழவு வேண்டாம் என்பதற்காகவே, ஆதியிலிருந்து ஹிந்தியை நாம் எதிர்க்கிறோம்.
கொஞ்சம் கொஞ்சமாக ஹிந்தியை திணிக்கவே, கிரிமினல் சட்டங்களின் பெயர்களை மாற்றி இருக்கின்றனர். நீதிமன்றங்களில் தொடர்ந்து ஹிந்தி ஒலித்தால் பழக்கமாகி விடும் என்று நினைக்கின்றனர். பெயர் மாற்றத்தை தவிர, சட்டத்திலும் சில மாற்றங்களை செய்திருக்கின்றனர்.
ஆட்சி அதிகாரத்தில் நிலைத்து நிற்க வேண்டும் என்று நினைப்பவர்கள், நீதித்துறையில் தான் கை வைப்பர். நீதிமன்றங்களுக்கு செல்ல முடியாதபடி, சில சட்டங்களை கடுமையாக்கிஉள்ளனர்.
பிடிக்காதவர்களை சிறையில் தள்ளி, சர்வாதிகாரத்தை நிலைநிறுத்தவும் தான் சட்டத்தை மாற்றி உள்ளனர்.
இவ்வாறு பேசினார்.