கூட்டணி ஒற்றுமையை உறுதி செய்ய திட்டம் காஞ்சிபுரத்தில் தி.மு.க., முதல் பொதுக்கூட்டம்
கூட்டணி ஒற்றுமையை உறுதி செய்ய திட்டம் காஞ்சிபுரத்தில் தி.மு.க., முதல் பொதுக்கூட்டம்
ADDED : செப் 18, 2024 10:20 PM
சென்னை:கூட்டணியில் எந்த உரசலும் இல்லை என்பதை வெளிப்படுத்த, மாவட்டவாரியாக, கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டங்கள் நடத்த, தி.மு.க., தலைமை திட்டமிட்டுள்ளது. அதன் முதல் கூட்டம், வரும் 28ம் தேதி காஞ்சிபுரத்தில் நடக்கிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாடும், அக்கட்சி தலைவர் திருமாவளவன், அ.தி.மு.க.,வுக்கு அழைப்பு விடுத்த விவகாரமும், தி.மு.க., கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. திருமாவளவனை அழைத்துப் பேசி, இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்த முதல்வர், அந்த சூட்டோடு கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் முதல் பொதுக்கூட்டத்தையும் அறிவித்துள்ளார்.
சென்னை அறிவாலயத்தில், நேற்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. பொதுச்செயலர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச்செயலர்கள் அமைச்சர் பொன்முடி, ஆ.ராஜா, அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி, ராஜ்யசபா எம்.பி., திருச்சி சிவா ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டணி ஒற்றுமையை வலுப்படுத்தவும், கூட்டணி கட்சி தலைவர்களிடம் இணக்கத்தை ஏற்படுத்தவும், மாவட்டம்தோறும் பொதுக்கூட்டங்கள் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதன்படி, கூட்டணி கட்சி தலைவர்கள் 20 பேரும் பங்கேற்கும் முதல் பொதுக்கூட்டம், வரும் 28ல் காஞ்சிபுரத்தில் நடக்கும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
தி.மு.க., அறிவிப்பு:
தி.மு.க., பவள விழாவை ஒட்டி, கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் பொதுக்கூட்டம், வரும் 28ம் தேதி காஞ்சிபுரம் பச்சையப்பர் ஆடவர் கல்லுாரி திடலில் நடக்கவுள்ளது. அமைச்சர் துரைமுருகன் தலைமை வகிப்பார். முதல்வர் ஸ்டாலின் சிறப்புரை ஆற்றுவார்.
கி.வீரமணி, செல்வப்பெருந்தகை, வைகோ, கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், காதர்மொய்தீன், திருமாவளவன், கமல், ஜவாஹிருல்லா, ஈஸ்வரன், வேல்முருகன், ஸ்ரீதர் வாண்டையார், பொன்குமார், எர்ணாவூர் நாராயணன், முருகவேல்ராஜன், தமீமுன் அன்சாரி, கருணாஸ், அதியமான், திருப்பூர் அல்தாப், அம்மாவாசி ஆகியோர் வாழ்த்துரை வழங்குவர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.