ADDED : பிப் 28, 2024 12:06 AM
திருப்பூர்:திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில், பா.ஜ.,வை சேர்ந்த நிர்வாகிகள் பேசியதாவது:
மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி: தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, பாத யாத்திரை துவங்கியவுடன், தி.மு.க.,வின் முதல் விக்கெட், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி சிறை சென்றார். இரண்டாவது விக்கெட், கவர்னரை போய்யா என்று சொன்ன அமைச்சர் பொன்முடி; மூன்றாவது விக்கெட் அமைச்சர் பெரியசாமி.
தேர்தல் முடிவதற்குள், 10 விக்கெட் விழும் என்று நம்புகிறேன். கிரிக்கெட்டில் அனில் கும்ப்ளே போன்று, தி.மு.க.,வின், 10 விக்கெட்டையும் சாய்த்து, தமிழகத்தில் பெரும் வெற்றியை பெற்றுக் கொடுப்பார்.
புதிய நீதிக்கட்சி தலைவர் சண்முகம்: காந்தி, வல்லபாய் படேல், நேதாஜி ஆகியோரின் உருவமாக பிரதமர் மோடி விளங்குகிறார்; உலக தலைவராக வலம் வருகிறார்; சிறந்த ராஜ தந்திரியாக செயல்படுகிறார்.
வரும் லோக்சபா தேர்தலில், 40 தொகுதிகளில், 30 தொகுதிகளில் பா.ஜ., வெற்றி பெற வேண்டும் என, கட்சியினர் உழைக்கின்றனர். முதல் வெற்றியாக வேலுாரில் பா.ஜ.,வுக்கு வெற்றியை ஈட்டிக் கொடுப்போம்.
தமிழக பா.ஜ., துணைத் தலைவர் ராமலிங்கம்: இன்னும், 30 ஆண்டுகளுக்கு நாடு முழுக்க பா.ஜ.,வை வலிமையோடு, பிரதமர் மோடியின் லட்சியங்களை தாங்கி, அண்ணாமலை வழிநடத்துவார்.
எச்.ராஜா, பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர்: தமிழகத்தில் பொய்யை மூலதனமாக்கி திராவிட கட்சிகள் செயல்படுகின்றன.
'இண்டியா' கூட்டணி, குடும்ப கட்சிகளின் கூட்டணியாக இருக்கிறது. ஜனநாயக விரோதிகள், ஒன்றாக இணைந்து கூட்டணி அமைத்துள்ளனர். 2024 தேர்தலில், மோடிக்கு எதிராக களத்தில் யாரும் இல்லை.
மத்திய அரசின் திட்டங்களுக்கு கருணாநிதியின் பெயரை சூட்டும் குடும்ப கட்சியாக தி.மு.க., செயல்படுகிறது.
ரேஷன் கடையில், பிரதமரின் திட்டத்தின் கீழ் அரிசி வழங்கும் பையில், கருணாநிதி, ஸ்டாலின் படங்கள் அச்சிடுகின்றனர்.
பா.ஜ., மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணன்: 'என் மண்; என் மக்கள்' யாத்திரையின் நோக்கம், தமிழகத்தில் அரசியல் ரீதியாக ஒரு மாற்றம் ஏற்பட வேண்டும். தேசத்தில் தமிழகம் முக்கிய பங்கு வகிக்கும் காலத்தை உருவாக்க வேண்டும்.
வரும் லோக்சபா தேர்தலில், மோடி, மீண்டும் ஆட்சியில் அமர்ந்து, உலகை, இந்தியாவின் காலடியில் விழ வைக்கும் நிலையை உருவாக்க வேண்டும்.
இந்த தேர்தலில், தமிழகத்தில் பா.ஜ., கூட்டணி குறைந்தபட்சம், 25 இடங்களை கைப்பற்றும் என, மாநில தலைவர் அண்ணாமலை தெளிவாக சொல்லியுள்ளார்; அதற்காக உழைக்க வேண்டும்.
தமிழகத்திற்கு ஒவ்வொரு முறை பிரதமர் வரும் போதும், பல கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை செயல்படுத்துகிறார்.
சமஸ்கிருதத்தை விட தமிழ்மொழி பழமையானது என, உலகளவில் தமிழ் மொழியை பெருமைப்படுத்தியவர் மோடி. பிரதமரின் ஆளுமையை, உலக நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன.
உலகம் இந்தியாவை நோக்கி வந்தாக வேண்டும். இதற்கு, மீண்டும், மோடி பிரதமராக வேண்டும். .
பா.ஜ., சட்டசபை தலைவர் நயினார் நாகேந்திரன்: தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, 234 தொகுதிகளிலும், நடைபயணத்தை வெற்றிகரமாக முடித்திருக்கிறார்.
திருப்பூரில் முடிந்த இந்த யாத்திரை, தமிழகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். உலகின் மிகப்பெரிய ராஜரிஷியாக பிரதமர் மோடி விளங்குகிறார். மோடிக்கு எதிராக யாரும் கிடையாது.
காங்., கூட்டணியில் இருந்து, கட்சிகள் விலகி கொண்டிருக்கின்றன. கடந்த சட்டமன்ற தேர்தலில், நம் கூட்டணி சரியாக இருந்திருந்தால், இன்னும் சில கட்சிகளை கூட்டணியில் இணைத்திருந்தால், தி.மு.க.,வால், ஆட்சிக்கு வந்திருக்கவே முடியாது.
தி.மு.க.,வின் தேர்தல் ஆலோசகராக இருந்த பிரசாந்த் கிஷோர் கூட, 'பா.ஜ., கூட்டணி இரட்டை இலக்க தொகுதிகளில் வெற்றி பெறும்' என்று கூறியுள்ளார்.
தமிழகத்தில், 30 சதவீத வாக்குகளை பா.ஜ., பெறும் என, கணக்கெடுப்புகள் கூறுகின்றன. அந்த வகையில் பதிவாகும் ஓட்டுகள், பிற கட்சிகள் பிரிக்கும் ஓட்டுகளை கணக்கிட்டால், ஒரு தொகுதியில், 4 லட்சம் ஓட்டுகளை பெற்றாலே, பா.ஜ., வெற்றி பெறும்.

