குன்றத்திற்கு கூட்டமாக வரும் வி.ஐ.பி.,க்களை அனுமதிக்காதீங்க! அரசுக்கு உளவுத்துறை அறிவுறுத்தல்
குன்றத்திற்கு கூட்டமாக வரும் வி.ஐ.பி.,க்களை அனுமதிக்காதீங்க! அரசுக்கு உளவுத்துறை அறிவுறுத்தல்
ADDED : ஜன 29, 2025 01:05 AM
மதுரை:'மதுரை திருப்பரங்குன்றம் மலையில் வழிபாடு செய்வதாகக் கூறி, ஆதரவாளர்களுடன் வரும் வி.ஐ.பி.,க்களை அனுமதிக்கக்கூடாது. தனியாக வந்தால் அனுமதிக்கலாம்' என, தமிழக அரசுக்கு, உளவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
திருப்பரங்குன்றம் மலையின் புனிதத்தை காக்கும் வகையில், அங்குள்ள தர்காவில் ஆடு, கோழிகளை பலியிடக்கூடாது என ஹிந்துக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
ராமநாதபுரம் எம்.பி., நவாஸ்கனி, மணப்பாறை தி.மு.க., - எம்.எல்.ஏ., அப்துல்சமது ஆகியோர் திருப்பரங்குன்றத்திற்கு வந்தனர். இதில் நவாஸ் கனியுடன் வந்தவர்கள், மலை படிக்கட்டில் பிரியாணி சாப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
மலை மீதுள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன், பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா, பா.ஜ., - எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் வந்தனர். ஆதரவாளர்களுடன் வி.ஐ.பி.,க்கள் வந்ததால் பதற்றமான சூழல் நிலவியது.
இது தொடர்ந்தால், சட்டம் - ஒழுங்கு பாதிக்கும் அபாயம் இருக்கும் எனக்கருதி, வி.ஐ.பி.,க்கள் வர தடைவிதிக்கப்பட்டது. இதை மீறி புறப்பட்ட பா.ஜ., சிறுபான்மையின பிரிவு தேசிய செயலர் வேலுார் இப்ராஹிம் கைது செய்யப்பட்டார். திருப்பரங்குன்றத்திற்கு செல்வதாக அறிவித்த மதுரை ஆதீனம், மடத்திலேயே போலீஸ் உத்தரவால் தங்க வைக்கப்பட்டார்.
இச்சூழலில் மலை மீதுள்ள கோவில் மற்றும் தர்காவில் வழிபட தடையில்லை என்பதால், இங்கு வழிபடும் நோக்கில் வரும் வி.ஐ.பி.,க்களை தாராளமாக அனுமதிக்கலாம். கூட்டமாக வந்தால் அனுமதிக்க வேண்டாம் என, தமிழக அரசுக்கு உளவுத்துறை அறிவுறுத்திஉள்ளது.

