ADDED : அக் 15, 2024 09:18 PM
சென்னை:'சென்னையில் வெள்ளத்தடுப்பு பணிகள் போதிய அளவுக்கு பயன் அளிக்கவில்லை என்பதை, 6 செ.மீ., மழையின் விளைவுகள் காட்டும் போது, 20 செ.மீ., மழை பெய்தால், சென்னை என்னவாகும் என்ற அச்சம் அதிகரித்துள்ளது' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
சென்னையில் நேற்று காலை, 8:00 மணியுடன் முடிவடைந்த, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக, 6 செ.மீ., மழை பெய்துள்ளது. பல பகுதிகளில் ஒரு அடி உயரத்திற்கும் அதிகமாக, மழைநீர் தேங்கி நிற்கிறது. பல இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.
தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சி மேற்கொண்ட, மழைநீர் வடிகால் உள்ளிட்ட வெள்ளத்தடுப்பு பணிகள், போதிய அளவு பயன் அளிக்காததை, 6 செ.மீ., மழையின் விளைவுகள் காட்டுகின்றன.
இந்நிலையில், 20 செ.மீ., மழை பெய்தால், சென்னை என்னவாகும் என்ற அச்சம் அதிகரித்திருக்கிறது. பொது மக்கள் தங்கள்கார்களை வேளச்சேரி, பள்ளிக்கரணை பாலத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.
'ஆயிரக்கணக்கில் அபராதம் விதித்தாலும் பரவாயில்லை. கார்களை பாலத்தில் நிறுத்துவோம்' என்று கூறியிருப்பது, அரசின் மீதான அவர்களின்அவநம்பிக்கையை காட்டுகிறது.
தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் வீண் விளம்பரங்களில் ஈடுபடுவதை தவிர்த்து, எவ்வளவு மழை பெய்தாலும், சென்னையில் வெள்ள நீர் தேங்காது என்ற நிலையை உருவாக்கும் அளவுக்கு, களப்பணிகளை செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தவறான தகவல்
'சென்னையில் நேற்று காலை, 8:00 மணியுடன் முடிவடைந்த, 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 6 செ.மீ., அளவுக்கு மட்டுமே மழை பெய்துள்ளது. அதையே சென்னை மாநகரத்தால் தாங்க முடியவில்லை' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது, தவறான தகவல். சென்னையில் நேற்று காலை 8:30 மணி வரை அதிகபட்சமாக, எண்ணுாரில், 10 செ.மீ., மணலி, திரு.வி.க., நகர், ராயபுரம், கொளத்துாரில் 9 செ.மீ., மழை பதிவாகி உள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- தமிழக அரசு