என்.ஐ.ஏ.,க்கு தெரியாததா இவருக்கு தெரிய போகிறது? வருண்குமார் பேச்சுக்கு சீமான் பதிலடி
என்.ஐ.ஏ.,க்கு தெரியாததா இவருக்கு தெரிய போகிறது? வருண்குமார் பேச்சுக்கு சீமான் பதிலடி
ADDED : டிச 06, 2024 06:59 AM

சென்னை : ''எங்கள் மீது, என்.ஐ.ஏ., ரெய்டு நடத்தப்பட்டுள்ளது; நாங்கள் பிரிவினைவாத இயக்கமா, இல்லையா என, அந்த அமைப்புக்கு தெரியாதா,'' என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார்.
அவர் அளித்த பேட்டி:
நாம் தமிழர் கட்சி பிரிவினைவாத இயக்கம் என்றும், அக்கட்சியை கண்காணிக்க வேண்டும் என்றும், திருச்சி எஸ்.பி., வருண்குமார் கூறியுள்ளார். எதை வைத்து, அவர் பிரிவினைவாதம் என்கிறார் என்பது தெரியவில்லை. ரொம்ப நாட்களாக, எங்கள் கட்சியை அவர் கண்காணித்துக் கொண்டு தானே இருக்கிறார்.
இந்திய அரசியல் சட்ட அமைப்பின் அடிப்படையில், தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளோம். 13 ஆண்டுகளாக, அரசியல் கட்சியாக நடத்துகிறோம். மக்கள் இயக்கம் இது. மக்களை சந்தித்து, தேர்தலில் போட்டியிட்டுள்ளோம். தேர்தல் கமிஷனே சின்னம் ஒதுக்கித் தந்துள்ளது.
தமிழகத்தில், 36 லட்சம் ஓட்டுகள் வாங்கி, மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கிறோம். தனித்து போட்டியிட்டபோது அங்கீகாரம் பெற்றுள்ளோம்.
திடீரென பிரிவினைவாத இயக்கம் என்றும், அதை கண்காணிக்க வேண்டும் என்றால், வருண்குமார் தான் நாட்டை ஆளுகிறாரா?
எங்கள் மீது ஏற்கனவே என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு அமைப்பு சார்பில், 'ரெய்டு' நடத்தப்பட்டுள்ளது. நாங்கள் பிரிவினைவாத இயக்கமா, இல்லையா என, அந்த அமைப்புக்கு தெரியாதா? அடிப்படை தகுதி இல்லாமல், வருண்குமார் பேசுகிறார்.
என் மொழி தமிழ். நான் தமிழில் பேசுவதால் தமிழ் இனவாதி என்றால், ஹிந்தி, சமஸ்கிருதம் படி என சொல்வது, இனவாதம் இல்லையா?
'உலக மொழிகளில் தமிழ் தொன்மையானது; மூத்த மொழி தமிழ், எங்கள் நாட்டில் இருப்பது பெருமை' என, பிரதமர் மோடி பேசுகிறார்.
அது தமிழ் இனவாதம் தானா? 'ஹிந்தி மொழியின் தொன்மையை தமிழிலிருந்து அறியலாம்' என்கிறாரே, அதுவும் தமிழ் இனவாதம் தானா?
வருணுக்கு மட்டும் தான் மனைவி, பிள்ளைகள் உள்ளனரா; எங்களுக்கு இல்லையா? என் குடும்பத்தினரையும், கட்சி நிர்வாகிகளையும் அவர் இழிவாக பேசுகிறாரே. இதை அவர் நிறுத்த மாட்டாரா? இவ்வாறு அவர் கூறினார்.