ADDED : டிச 29, 2024 12:50 AM

அண்ணா பல்கலையில், மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்து ஆய்வு செய்த கவர்னர் ரவி, 'அண்ணா பல்கலை மாணவர்களும், பெற்றோரும் அச்சப்பட வேண்டாம்' என்று தெரிவித்துஉள்ளார்.
கவர்னரும், அண்ணா பல்கலையின் வேந்தருமான ரவி, நேற்று பகல், 12:30 முதல் 2:00 மணி வரை, சென்னை, அண்ணா பல்கலை வளாகத்தில் ஆய்வு செய்தார்.
பின்னர், கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கை:
அண்ணா பல்கலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யவும், மாணவ, மாணவியருடன் உரையாடவும், கவர்னர் ரவி அண்ணா பல்கலைக்கு சென்றார்.
அப்போது, பல்கலை பதிவாளர் மற்றும் மூத்த பேராசிரியர்களிடம், பல்கலை வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். மாணவ, மாணவியரிடம்தனித்தனியாக உரையாடினார்.
வளாக பாதுகாப்பு குறித்து அவர்கள் கூறிய கருத்துகள், பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகளை பொறுமையாக கேட்டறிந்தார். பின், பாதுகாப்பை உறுதி செய்வதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள, பல்கலை நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார்.
அதனால், அண்ணா பல்கலையில் பயிலும் மாணவர்கள், அவர்களின் பெற்றோர், இச்சம்பவம் குறித்து அச்சம் அடைய வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.