எங்க ஏரியா உள்ளே வராதே... வருவாய் துறையினருக்கு எதிர்ப்பு
எங்க ஏரியா உள்ளே வராதே... வருவாய் துறையினருக்கு எதிர்ப்பு
ADDED : ஜூலை 18, 2025 10:28 PM
சென்னை:வருவாய்த் துறை அலுவலர்களை இடமாற்றம் செய்து, நகராட்சிகளில் பணியமர்த்தி வருவதற்கு, தமிழ்நாடு மாநகராட்சி அமைச்சு பணியாளர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துஉள்ளது.
இதுகுறித்து, அச்சங்கத்தின் தலைவர் சுப்பிரமணியன் கூறியதாவது:
மாவட்ட அளவில் துணை கலெக்டர்களாக பணியாற்றி வரும் வருவாய்த் துறை அலுவலர்கள், நகராட்சி நிர்வாகங்களில் மண்டல உதவி கமிஷனராக மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
இதனால், மாநகராட்சி, நகராட்சிகளில் பல ஆண்டுகளாக பணியாற்றி, பதவி உயர்வுக்காக காத்திருக்கும் நகராட்சி நிர்வாக அதிகாரிகள் பாதிக்கப்படுகின்றனர்.
மேலும், பணியிட மாறுதல் உத்தரவை, நகராட்சி நிர்வாகத் துறை செயலர் அல்லாமல், வருவாய்த் துறை செயலர் தான் பிறப்பிக்கிறார். இது, நகராட்சி நிர்வாக விதிகளுக்கு புறம்பானது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, வருவாய்த் துறையில் இருந்து நகராட்சி நிர்வாகத் துறைக்கு அதிகாரிகள் மாற்றம் செய்யப்படுவது குறித்து, முதல்வர், அமைச்சர், செயலர் உள்ளிட்டோருக்கு மனு அளித்துள்ளேன்.
ஆனால், தீர்வு காணாமல் தொடர்ந்து, நகராட்சி நிர்வாகத் துறைக்கு மாற்றம் தொடர்கிறது. குறிப்பாக, நகராட்சி நிர்வாக அனுபவ திறன் இல்லாதவர்களை நியமிப்பதால், அவர்களின் கீழ் பணியாற்றும் பணியாளர்களும் பாதிக்கப்படுகின்றனர்.
நகராட்சி நிர்வாகத்தை அரசு வலுப்படுத்த நினைத்தால், அனுபவம் வாய்ந்த மற்றும் தகுதியுடைய நகராட்சி நிர்வாகத் துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிக்க வேண்டும். இந்நிலை தொடர்ந்தால், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தீர்வு காண முயற்சிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.