நாய்களின் வால், காதுகளை வெட்டக்கூடாது மாநில நாய் வளர்ப்பு கொள்கையில் எச்சரிக்கை
நாய்களின் வால், காதுகளை வெட்டக்கூடாது மாநில நாய் வளர்ப்பு கொள்கையில் எச்சரிக்கை
ADDED : செப் 27, 2024 10:55 PM
சென்னை:சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, நாய்கள் வளர்ப்பு மற்றும் இனப்பெருக்கத்தை ஒழுங்குபடுத்த, 'தமிழ்நாடு நாய் வளர்ப்புக் கொள்கை -2024' வெளியிடப்பட்டு உள்ளது. இது, விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.
நெறிமுறை இனப்பெருக்கம்; கண்மூடித்தனமான இனப்பெருக்கத்தை தடுப்பது; மரபணு கோளாறுக்கு வழிவகுக்கும் இனப்பெருக்கத்தை தவிர்ப்பது; வெளிநாடுகளில் இருந்து நோய்கள் வராமல் தடுப்பது; நாய் வளர்க்க உரிமம் வழங்குவது; வளர்ப்பு நாய்களுக்கு சான்றிதழ் வழங்குவது; நாய் வளர்ப்பு நிறுவனங்களை கண்காணிப்பது போன்றவற்றை, இக்கொள்கை வலியுறுத்துகிறது.
ராஜபாளையம், கோம்பை, சிப்பிப்பாறை, கன்னி ஆகியவை, தமிழகத்தின் அங்கீகரிக்கப்பட்ட பூர்வீக நாய் இனங்கள்.
இவற்றை பாதுகாப்பதுடன், அழிவின் விளிம்பில் உள்ள, கட்டை, ராமநாதபுரம் மண்டை நாய், மலை பட்டி, செங்கோட்டை நாய் போன்ற நாட்டு நாய்கள் அழிந்து விடாமல் காக்க வேண்டும். நாட்டு இனங்களின் இனப்பெருக்கம் ஊக்குவிக்கப்படும்.
நாய்களை வளர்த்து இனப்பெருக்கம் செய்ய, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தமிழ்நாடு விலங்குகள் நல வாரியத்திடம் உரிமம் பெற வேண்டும்.
இனப்பெருக்கத்திற்கு பயன்படுத்தப்படும் நாய்களுக்கு, தொடர்ந்து தடுப்பூசி போட வேண்டும். இதற்கான ஆதாரத்தை கையில் வைத்திருக்க வேண்டும். நாய்களின் வயது குறித்து, கால்நடை மருத்துவரால் சான்றளிக்கப்பட வேண்டும்.
வாலை நறுக்குதல், காதுகளை வெட்டுதல், நகங்களை அகற்றுதல், சாயமிடுதல் போன்றவற்றை செய்யக்கூடாது. நாயின் உடல் பகுதியை சிதைப்பது, செயற்கையாக தோற்றத்தில் மாற்றம் செய்வது தடை செய்யப்படுகிறது.
நம் நாட்டின் தட்பவெப்பநிலையைத் தாங்க முடியாத, பாசெட் ஹவுண்ட், பிரஞ்சு புல்டாக், அலாஸ்கன் மலாமுட், சவ்சவ், கிேஷாண்ட், நியூபவுண்லேண்ட், நார்வேயன் எல்கண்வட், திபெத்தியன் மாஸ்டிப், சைபீரியன் ஹஸ்கி, செயின்ட் பெர்னார்ட், பக் போன்ற நாய் இனங்கள் தடை செய்யப்படும்.
இனப்பெருக்கத்திற்கு பயன்படுத்தப்படும் நாய்கள், ஒவ்வொரு ஆண்டும் பதிவு செய்யப்பட்ட, கால்நடை மருத்துவரால் சான்றளிக்கப்பட வேண்டும்.
மேலும், நாய்கள் இனப்பெருக்கம், விற்பனை, அவற்றின் பாதுகாப்பு, உணவு, தடுப்பூசி போடுதல், சுகாதாரம் போன்றவை தொடர்பான விதிமுறைகளும், நாய் வளர்ப்பு கொள்கையில் இடம்பெற்றுள்ளன.