அதானிக்கு சலுகை காட்ட கூடாது: தமிழக அரசுக்கு சொல்கிறார் அன்புமணி!
அதானிக்கு சலுகை காட்ட கூடாது: தமிழக அரசுக்கு சொல்கிறார் அன்புமணி!
ADDED : டிச 06, 2024 01:08 PM

சென்னை: 'தொழிலதிபர் அதானிக்கு சலுகை காட்டக் கூடாது. ஸ்மார்ட் மீட்டர் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். அரசே செயல்படுத்த வேண்டும்' என பா.ம.க., தலைவர் அன்புமணி தெரிவித்தார்.
அவரது அறிக்கை:
தமிழகத்தில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்சார இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தின் முதல் தொகுப்பிற்கான ஒப்பந்தத்தை அதானி குழும நிறுவனத்துக்கு தமிழ்நாடு மின்வாரியம் வழங்கக் கூடும் என்று வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்ட காலத்துக்கும் இன்றைக்கும் இடையிலான சூழல்கள் மிகப்பெரிய அளவில் மாறியிருக்கும் நிலையில், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் குறிப்பிடப்பட்ட விலையில் ஸ்மார்ட் மீட்டர்களை வாங்கக்கூடாது. 2025ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் கணிசமான எண்ணிக்கையிலான மின் இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட வேண்டும்.
தமிழகத்தில் மொத்தம் 3 கோடி இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்படவுள்ளன. தமிழகத்தின் மாவட்டங்கள் மொத்தம் 4 தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக கடந்த ஆண்டு ஆகஸ்டில் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டன. அவற்றில் முதல் தொகுப்புக்கான ஒப்பந்தங்களின் விலைப்புள்ளிகள் இறுதி செய்யப்படும் கட்டத்தை நெருங்கியிருப்பதாகவும், அதில் அதானி குழுமத்தைச் சேர்ந்த அதானி எனர்ஜி சொலுசன்ஸ் லிமிடெட் (Adani Energy Solutions Limited) குறைந்த விலையை குறிப்பிட்டிருப்பதால், அந்த நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்படக் கூடும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அதானி குழும நிறுவனம் குறைந்த விலையை குறிப்பிட்டிருப்பதால், அதற்கு ஒப்பந்தம் வழங்கப்படலாம் என்பதை மேலோட்டமாகப் பார்க்கும் போது, சரியான முடிவு தானே என்று தோன்றலாம். ஆனால், ஸ்மார்ட் மீட்டர் குறித்த முழுமையான விவரங்களை நன்றாக அறிந்தவர்களுக்குத் தான் இதன் பின்னணியில் உள்ள குறைகள் தெரியும். ஸ்மார்ட் மீட்டர்கள் என்பது இந்தியாவைப் பொறுத்தவரை புதிய தத்துவமாகும். சில ஆண்டுகளுக்கு முன்பு தான் இந்தியாவில் ஸ்மார்ட் மீட்டர் உற்பத்தி தொடங்கியது.
ஸ்மார்ட் மீட்டர்களை பராமரிப்பதற்கான காலம் 7 ஆண்டுகளா அல்லது 10 ஆண்டுகளா? என்பதை தமிழ்நாடு மின்சார வாரியம் இன்னும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. மாதாந்திர தொகையை குறைப்பது குறித்து அதானி குழுமத்துடன் பேச்சு நடத்தப்படுவதாக மின்வாரிய அதிகாரிகள் கூறியுள்ளனர். அதன்படி 10% குறைக்கப்பட்டாலும் கூட, அதானி குழுமத்திற்கு செலுத்தப்படும் தொகை மிகவும் அதிகமாகவே இருக்கும். இதை நேரடியாக நுகர்வோரிடமிருந்து மின் வாரியம் வசூலிக்காவிட்டாலும், கட்டண உயர்வு உள்ளிட்ட மறைமுக வழிகளில் வசூலித்து விடும்.
அதானி போன்ற பெரு நிறுவனங்கள் கொள்ளையடிப்பதையும், அதற்கு தமிழக அரசு துணை போவதையும் அனுமதிக்க முடியாது. தொழிலதிபர் அதானிக்கு சலுகை காட்டக் கூடாது. ஸ்மார்ட் மீட்டர் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். அரசே செயல்படுத்த வேண்டும். ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் ஒப்பந்தம் வழங்கப்பட்டால், அதை எதிர்த்து தமிழக மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பாமக நடத்தும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.