என் கட்சியினர் மீது கை வைக்காதீர்கள் என்னை எது வேண்டுமானாலும் செய்யுங்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு விஜய் திடீர் சவால்
என் கட்சியினர் மீது கை வைக்காதீர்கள் என்னை எது வேண்டுமானாலும் செய்யுங்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு விஜய் திடீர் சவால்
ADDED : அக் 01, 2025 07:41 AM

சென்னை : 'சி.எம்., சார்... உங்களுக்கு பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், என்னை எது வேண்டுமானாலும் செய்யுங்கள்; கட்சியினர் மீது கை வைக்காதீர்கள்' என, த.வெ.க., தலைவர் விஜய் கூறியுள்ளார்.
த.வெ.க., தலைவர் விஜய், கரூரில் பிரசாரம் செய்த போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியாகினர். இந்த சம்பவம் நடந்து, 72 மணி நேரத்திற்கு பின், வீடியோ பதிவு ஒன்றை விஜய் நேற்று வெளியிட்டார். அதில், அவர் கூறியிருப்பதாவது:
என் வாழ்க்கையில் இதுபோன்ற வலிமிகுந்த தருணத்தை கடந்து வந்ததில்லை. வலி மட்டும் தான் உள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில், என்னை சந்தித்த மக்கள் வைத்துள்ள அன்புக்கும், பாசத்திற்கும் நான் கடமைப்பட்டு இருக்கிறேன்.
மக்களை சந்திப்பதற்கு இடம் தேர்வு செய்து, போலீசாரிடம் அனுமதி கேட்டோம். ஆனால், நடக்கக்கூடாது நடந்து விட்டது. நானும் மனுஷன் தானே. அந்த நேரத்தில் அத்தனை பேரும் பாதிக்கப்பட்டு இருக்கும் போது, எப்படி நான் அந்த ஊரை விட்டு கிளம்பி வர முடியும்; நான் திரும்ப அங்கு போக முடியும்.
அதை ஒரு காரணம் காட்டி, வேறு சில பதற்றமான சம்பவங்கள் நடக்காமல் இருப்பதற்காக, அங்கு செல்வதை நான் தவிர்த்து விட்டேன்.
இந்த சம்பவத்தில், சொந்தங்களை இழந்து தவிக்கும் அத்தனை குடும்பங்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நேரத்தில், எதை சொன்னாலும் ஈடு இணையாகாது.
மருத்துவமனையில் சிகிச்சை பெறும் எல்லாரும் விரைவில் நலம் பெற வேண்டும். கூடிய விரைவில் எல்லாரையும் நான் சந்திக்கிறேன். என் வலிகளையும், நிலையையும் புரிந்து, எங்களுக்காக பேசிய அரசியல் கட்சி தலைவர்கள், நண்பர் களுக்கு நன்றி.
கிட்டத்தட்ட ஐந்து மாவட்டங்களுக்கு பிரசாரம் சென்றோம். கரூரில் மட்டுமே இப்படி நடந்து விட்டது. மக்களுக்கு எல்லா உண்மையும் தெரியும். மக்கள் பார்த்துக் கொண்டு இருக்கின்றனர்.
கரூரைச் சேர்ந்த மக்கள் உண்மையை வெளியில் சொல்லும் போது, எனக்கு கடவுள் நேரில் வந்து உண்மையை சொல்லுவது போல தோன்றியது. சீக்கிரம் எல்லா உண்மைகளும் வெளியே வரும்.
எங்களுக்கு தரப்பட்ட இடத்தில், நாங்கள் பேசியதை தவிர, வேறு எந்த தவறும் செய்யவில்லை. இருந்தும், எங்கள் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் மீது வழக்கு பதிவு செய்கின்றனர். சமூக வலைதளத்தில் பதிவிட்டதாகவும் வழக்குப் பதிவு செய்கின்றனர்; பிடிக்கின்றனர்.
சி.எம்., சார்... உங்களுக்கு பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், என்னை எது வேண்டுமானாலும் செய்யுங்கள்; அவர்கள் மீது கை வைக்காதீர்கள்.
நான் வீட்டில் இருப்பேன்; இல்லையென்றால் ஆபீசில் இருப்பேன். என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். என் அரசியல் பயணம் இன்னும் பலமுடன் மிக விரைவில் தொடரும் .
இவ்வாறு வீடியோ பதிவில் விஜய் கூறியுள்ளார்.