உச்சநேர மின் பயன்பாட்டை கணக்கெடுக்க டி.ஓ.டி., மீட்டர் பொருத்த வாரியம் உத்தரவு
உச்சநேர மின் பயன்பாட்டை கணக்கெடுக்க டி.ஓ.டி., மீட்டர் பொருத்த வாரியம் உத்தரவு
ADDED : ஜன 17, 2025 10:59 PM
சென்னை:தனியார் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட மின் இணைப்புகளில், உச்சநேர மின் பயன்பாட்டை கணக்கெடுக்க, டி.ஓ.டி., எனப்படும், 'டைம் ஆப் தி டே மீட்டர்' பொருத்தும்படி, பொறியாளர்களுக்கு மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக மின் நுகர்வானது தினமும் காலை, மாலையில் சராசரியாக, 16,000 மெகாவாட்டாகவும்; மற்ற நேரங்களில், 15,000 மெகாவாட்டாகவும் உள்ளது.
இதனால், தொழிற்சாலை போன்றவற்றில் காலை, மாலையில் பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கு, 'பீக் ஹவர் சார்ஜ்' எனப்படும், உச்ச நேர கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
அதன்படி, காலை 6:00 முதல், 10:00 மணி வரையும்; மாலை 6:00 முதல் இரவு, 10:00 மணி வரையும் உச்சநேர மின் கட்டணமாக, 1 யூனிட் கட்டணத்துடன், 25 சதவீதம் கூடுதலாக சேர்த்து வசூலிக்கப்படுகிறது.
இரவு, 10:00 முதல் அதிகாலை, 5:00 மணி வரை பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கு யூனிட் கட்டணத்தில், 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
அதற்கு ஏற்ப, உச்ச நேரம், சலுகை நேரம், மற்ற நேர மின் பயன்பாட்டை தனித்தனியே கணக்கெடுக்க, டி.ஓ.டி., மீட்டர் பொருத்தப்படுகிறது.
இந்த மீட்டர், உயரழுத்த பிரிவில் இடம்பெறும் மின் இணைப்புகளில் பொருத்தப்பட்டு உள்ளன. தாழ்வழுத்த பிரிவில், சிறு தொழில்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், அரசு மருத்துவமனைகள், தனியார் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகளில் உச்சநேர மின் பயன்பாடு இடம் பெறுகிறது.
இந்த மின் இணைப்புகளில் டி.ஓ.டி., மீட்டர் பொருத்தப்படும் வரை, மொத்த மின் பயன்பாட்டு கட்டணத்துடன் சேர்த்து, 20 சதவீதம் கூடுதலாக வசூலிக்க, 2022ல் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி வசூலிக்கப்படுகிறது.
பலர், இரவில் பயன்படுத்தும் மின்சாரத்துக்கு சலுகை கேட்கின்றனர்.
எனவே, இதுவரை பொருத்தப்படாத மின் இணைப்புகளில் உச்சநேர மின் பயன்பாட்டை கணக்கெடுக்கும், டி.ஓ.டி., மீட்டர் பொருத்துமாறு பொறியாளர்களுக்கு, மின் வாரியம் உத்தரவிட்டு உள்ளது.